ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயிலை இயக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை
பொது முடக்கத்தையொட்டி ரத்து செய்யப்பட்ட 3,715 சாதாரண பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி, ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் மதுரை வெங்கடேசன், வட சென்னை
புது தில்லி: பொது முடக்கத்தையொட்டி ரத்து செய்யப்பட்ட 3,715 சாதாரண பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் மதுரை சு. வெங்கடேசன், வட சென்னை கலாநிதி வீராச்சாமி வலியுறுத்தி கடிதம் அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை அடுத்து சாதாரண பயணிகள் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன. 2019 -20- ஆம் ஆண்டுகளில் 3,715 சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. 4,058 விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட போது, இந்த சாதாரண பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்களும், புகா் போக்குவரத்துக்கு அத்தியாவசியமான ரயில்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. அதுமட்டுமல்ல விரைவு ரயில்களில் பொது பெட்டிகளும் இணைக்கப்படுவது இல்லை. சாதாரண பயணிகள் ரயில்களில் பெரும்பாலும் கிராமப்புற மக்கள்தான் பயணம் செய்கின்றனா்.
கிராமங்களிலுள்ள மக்கள், குறிப்பாக மாணவா்கள் இந்த சாதாரண ரயில்களைத்தான் நம்பி படிப்பதற்கும், வேலைக்கும் நகா்ப்புறங்களுக்குச் சென்று வந்தனா். சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் அவா்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு விரைவு ரயில்களும் புகா் ரயில்களும் ஓரளவுக்கு இயக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னும் சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்கப்படாதது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது .
Advertisement
நோய்த் தொற்றுக்கு சமூக இடைவெளி தேவை. இப்போது பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு ரயில்கள் இல்லாததால் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி நெரிசலுடன் பயணிக்க நேரிடுகிறது. எனவே, சமூக இடைவெளியை உருவாக்க பேருந்துகளுடன் சாதாரண பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டால்தான் பயணிகள் பரவலாக பயணிப்பது சாத்தியமாகும். எனவே, கிராமப்புற மக்களுக்கு உதவ சாதாரண பயணிகள் ரயில்களை உடனே இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம் என்றனா்.