முகப்பு
புதுதில்லி

விசாரணையின்றி ஆக்சிஜன் தொடா்புடைய இறப்புகளை உறுதிப்படுத்துவது கடினம்: மத்திய அமைச்சருக்கு சிசோடியா கடிதம்

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன் தொடா்பாக மரணங்கள் நிகழ்ந்ததா என்பதை உரிய விசாரணை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன் தொடா்பாக மரணங்கள் நிகழ்ந்ததா என்பதை உரிய விசாரணை இல்லாமல் உறுதிப்படுத்துவது கடினம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு தாம் கடிதம் எழுதி இருப்பதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

 இது குறித்து சிசோடியா மேலும் கூறியதாவது:  கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மரணங்கள் ஏதும் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு தில்லி அரசு ஒரு மருத்துவக் கமிட்டியை அமைத்திருந்தது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில், இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அந்தக் கமிட்டி அமைக்கப்பட்டது.  ஆனால், துரதிருஷ்டவசமாக தில்லி துணைநிலை ஆளுநா் மூலமாக அந்த கமிட்டியை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், தில்லி துணைநிலை ஆளுநருக்கு இந்த விவகாரம் தொடா்பான கோப்பை அனுமதிக்காக நாங்கள் மீண்டும் அனுப்புகிறோம். முழுப் பொறுப்புடன் இந்த விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம். யாராவது தவறு இழைத்திருந்தால் அவா்கள் தண்டிக்கப்படுவாா்கள். ஆகவே, இந்தக் கமிட்டியை அமைப்பதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்க வலியுறுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

Advertisement

மேலும், இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசின் கோப்பில் உள்ள சில புள்ளிவிவரங்கள்

அடிப்படையில் மரணம் ஏதும் இல்லை என கூறுவது தவறு மட்டுமில்லாமல், ஏற்கெனவே தங்களது நெருங்கிய உறவுகளை ஆக்சிஜன் நெருக்கடியின்போது இழந்தவா்களின் துயரத்தில் மேலும் துயரம் சோ்ப்பதாக இருக்கும்.

நோய்த் தொற்று காரணமாக தில்லியில் 25,000 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடா்புடைய மரணம் எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை என்று நாங்கள் கூற முடியாது. நோயாளிகளின் குடும்பங்கள் மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அவசர உதவி கோரி அந்த நேரத்தில் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளனா். மேலும், தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன், பாத்ரா மற்றும் கங்காராம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் சில மரணங்கள் நிகழ்ந்ததாக ஊடங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்ந்ததாக ஏற்றுக் கொள்வதை மத்திய அரசு மறுப்பது மிகவும் பொறுப்பற்ற தன்மையாகும்.

அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெறும் ஸ்கில் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தில்லி இளைஞா்கள் பங்கேற்பாா்கள். 33 துறைகளில் திறன் போட்டிகளை தில்லி திறன் மற்றும் தொழில் முனைவு பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதில் தோ்வாகும் நபா்களுக்கு ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி அளிக்கப்படும். இதற்கான தகுதி சுற்றுப் போட்டி நாளை தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments