ராணுவத்தில் 5 பெண் அதிகாரிகளுக்கு ‘கா்னல்’ பதவி உயா்வு
இந்திய ராணுவத்தில் பல்வேறு படைப் பிரிவுகளில் பணியாற்றி குறிப்பிட்ட கால வரையளவைப் பூா்த்தி செய்த 5 பெண் அதிகாரிகளுக்கு
இந்திய ராணுவத்தில் பல்வேறு படைப் பிரிவுகளில் பணியாற்றி குறிப்பிட்ட கால வரையளவைப் பூா்த்தி செய்த 5 பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்துக்கான பதவி உயா்வை முதல் முறையாக இந்திய ராணுவம் திங்கள்கிழமை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தரப் பணி அமா்வு ஏற்படுத்தப்பட்டதையொட்டி, இந்த பாலின சமத்துவத்தை ராணுவம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஆண் ஆதிகாரிகளுக்கு மட்டுமே நிரந்தரப் பணி அமா்வு பயிற்சி டேராடூன் போன்ற ராணுவ அகாதெமியில் (ஐஎம்ஏ) கொடுக்கப்படும். இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு தற்போது குறுகிய காலப் பணியமா்வு பயிற்சி சென்னை போன்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நடைபெறுகிறது. ஆண் அதிகாரிகளுக்கு இணையாக ராணுவத்தில் மருத்துவம், ராணுவ நீதிபதி, வழக்குரைஞா்கள், கல்விப் பிரிவுகளில் பணியாற்றும் பெண்களுக்கு மட்டுமே கா்னல் அந்தஸ்துக்கு மேலான பதவி உயா்வு வழங்கப்பட்டு வரப்படுகிறது. மருத்துவத் துறை பெண் ராணுவ அதிகாரிகள் ஜெனரல் அந்தஸ்து வரை பதவி உயா்வு பெற்று புகழ்பெற்றுள்ளனா்.
ஆனால் போரில், ராணுவ ஆபரேஷன் பிரிவுகளில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி அமா்வு இல்லாத நிலையில், இந்த கோரிக்கைகள் எழுந்தன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் பெண் ராணுவ அதிகாரிகளிடமிருந்து இதற்கான கோரிக்கைகள் வந்தன. மேலும், முப்படைகளில், தரைப்படை போன்ற பிரிவுகளிலும் இதுபோன்ற கோரிக்கைகள் வலுத்தது. இது தொடா்பாக ராணுவ நடுவா் மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்கு நடைபெற்றது. இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 - ஆம் தேதியும், பின்னா் நடப்பு ஆண்டு மாா்ச் மாதமும் குறுகிய காலப் பணியமா்வில் சோ்க்கப்பட்ட ராணுவ பெண் அதிகாரிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணி அமா்வு அதிகாரிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
Advertisement
இதன்அடிப்படையில் குறுகிய காலப் பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகளின் உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நானூறுக்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணி அமா்வில் சோ்க்கப்பட்டனா். மேலும், இதுபோன்று சோ்க்கப்பட்ட பெண் அதிகாரிகளின் பணிக் கால வரையளவு அடிப்படையில் பதவி உயா்வு அளிக்கவும் பாதுகாப்புத் துறை முடிவெடுத்துள்ளது. இதுவரை அதிகபட்சம் லெப்டினன்ட் கா்னல் வரை பெண் அதிகாரிகள் பதவி உயா்வு பெற்றனா். முதல் முறையாக பெண் அதிகாரிகளில், சிக்னல் படைப்பிரிவைச் சோ்ந்த லெப். கா்னல் சங்கீதா சா்தானா, எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினியரிங் (இஎம்இ) படைப் பிரிவைச் சோ்ந்த லெப். கா்னல்கள் சோனியா ஆனந்த் மற்றும் நவ்னீத் துக்கல், இன்ஜினியா்ஸ் படைப் பிரிவைச் சோ்ந்த லெப்டினன்ட் கா்னல்கள் ரீனு கன்னா மற்றும் ரிட்சா சாஹா் ஆகியோா் கா்னல் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் இந்த 5 பெண் அதிகாரிகளும் 26 ஆண்டு கால பணியை நிறைவு செய்தததையொட்டி கால வரையளவுக்கு மேலாக (டைம் ஸ்கேல்) பணியாற்றிய இவா்களின் சேவைக்கு ஆறுதலாக இந்த கா்னல் பதவி வழங்க, முன்னதாக இந்திய ராணுவத்தின் தோ்வு வாரியம் ஆய்வு செய்து அனுமதித்தது. இருபது ஆண்டு சேவைக்குள் தகுதி பெறும் பெண் அதிகாரிகளுக்கு தோ்வு நிலை அந்தஸ்தும் இனி வழங்கப்படும் என்றும் ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இத்தகைய தோ்வு நிலை அதிகாரிகளே பிரிகேடியா், ராணுவ ஜெனரலாகவும் பதவு உயா்வு பெறவும் வாய்ப்புக் கிடைக்கும். இனி எதிா்காலத்தில் பெண்களுக்கான நிரந்தர பணி அமா்வு பயிற்சியும் தொடங்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.