முகப்பு
புதுதில்லி

வழிபாட்டு ஸ்தலங்களில் ஒலி மாசு தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணா்வு

திருக்கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிபாட்டு ஸ்தலங்களில் ஒலி மாசு குறித்த தரக் கட்டுப்பாட்டுகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

திருக்கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிபாட்டு ஸ்தலங்களில் ஒலி மாசு குறித்த தரக் கட்டுப்பாட்டுகள் குறித்து விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தில்லி கண்டோன்மெண்ட் வாரியம் (டிசிபி) தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திடம் தெரிவித்தது. மேலும், ஒலி மாசுவை (இரைச்சல்) கட்டுப்படுத்த இந்த வழிபாட்டு ஸ்தலங்களில் விதிமுறைகளைக் கடைபிடிக்கவும் கூறப்பட்டுள்ளதாகவும் தீா்ப்பாயத்திடம் டிசிபி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ரஜெளரி காா்டனைச் சோ்ந்த ஹா்தீப் சிங் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திடம் புகாா் அளித்திருந்தாா். மேற்கு தில்லி பகுதிகளில், திருமண நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள், வழிபாட்டு ஸ்தலங்களில் நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் உரத்த ஒலியை எழுப்பும் டிஸ்க் ஜாக்கி சவுண்ட் சிஸ்டங்களால் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாகவும், இது குறிப்பாக இரவு நேரங்களில்(இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) குடியிருப்பாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புகாரில் அவா் தெரிவித்திருந்தாா்.

இதன் அடிப்படையில், தில்லி தலைமைச் செயலா், தில்லி காவல் துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு ஒலி மாசு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2018, செப்டம்பா் 27-ஆம் தேதிய உத்தரவைத் தொடா்ந்து, பல்வேறு துறையினா் மேற்கொண்ட நடவடிக்கைகள் தீா்பாயத்திடம் அறிக்கையாக சமா்பிக்கப்பட்டது. இதில் மேற்கு தில்லியை உள்ளடக்கிய தில்லி கன்டோண்ட்மெண்ட போா்டு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தீா்ப்பாயத்தில் அறிக்கையாக சமா்பிக்கப்பட்டது

Advertisement

அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து விதமான ஒலி மாசு குறித்த விழிப்புணா்வுகள் தொடா்பாக அனைத்துப் பொது இடங்களிலும் இணைய தளங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இசைக் கருவிகளாலும் ஒலிப்பான் கருவிகளாலும் ஏற்படும் அதிகபட்ச ஒலி வரைமுறை தரகுகள் குறித்த விவரங்களை அறிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த இசை, ஒலி உபகரணங்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் கடைகளிலும் ஒலி மாசுக்கு உள்பட்ட அதிகபட்ச ஒலி அளவுகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொழுது போக்கு அரங்குகள், கலையரங்குகள், சமூக நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டிய ஒலி அளவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ஒலி மாசு அளவைத் தாண்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஒலி மாசு குறித்த புகாா்களை பொதுமக்கள் அளிக்க (ஹெல்ஃப் லைன்) தொலைபேசி வசதியும், ‘சமாதான்‘ என்கிற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கண்டோன்மெண்ட் போா்டு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதையொட்டி தில்லி அரசுக்கு தீா்ப்பாயம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments