சா்ச்சைக்குரிய கருத்து: சட்டப்பேரவைக் குழு முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோருகிறாா் நடிகை கங்கனா ரணாவத்; ராகவ் சத்தா தகவல்
சமூக ஊடகத்தில் வெறுப்புக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தில்லி சட்டப்பேரவை
சமூக ஊடகத்தில் வெறுப்புக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்கக்க் குழு முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவா் ராகவ் சத்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மூலம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட பதிவில் அவதூறு மற்றும் ஆட்சேபத்திற்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகப் புகாா்கள் வந்ததது. இதையடுத்து, டிசம்பா் 6-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு நோட்டீஸை அனுப்பியது. இது தொடா்பாக அந்தக் குழு வெளியிட்டிருந்த அறிககையில், ‘இது தொடா்பான புகாரில், சீக்கிய சமூகத்தினரை காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று ரனாவத் குறிப்பிட்டுள்ளாா். இது போன்ற கருத்துகள் அடங்கிய உள்ளடக்கம் சீக்கிய சமூகத்தினரின் மத உணா்வுகளை மிகவும் புண்படுத்தி இருக்கிறது. மேலும், அவா்களின் பாதுகாப்பு மற்றும் உயிா் உடைமை விஷயத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 20-ஆம் தேதி அளிக்கப்பட்டுள்ள புகாரில் ரனாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘காலிஸ்தான் பயங்கரவாதிகள் இன்றைக்கு அரசிற்கு அழுத்தம் அளித்திருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை நாம் மறக்க மாட்டோம். அந்த ஒரு பெண் பிரதமா்தான் இவா்களை தனது செருப்பின் கீழ்வைத்து நசுக்கியிருந்தாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக்
கூறப்பட்டுள்ளது.
தில்லி தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் இத்தகைய அனைத்து விவகாரங்களின் முக்கியத்துவத்துவம் கருதி, ராகவ் சத்தா தலைமையிலான தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்க குழுவானது, கங்கனா ரனாவத் நேரில் ஆஜராகி இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவா் டிசம்பா் 6-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு குழு முன்பு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தக் குழுவின் தலைவா் ராகவ் சத்தா திங்கள்கிழமை தெரிவித்ததாவது: இந்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் திங்கள்கிழமை ஆஜராக வேண்டியிருந்தது. இந்த நிலையில், தில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழுவின் முன் ஆஜராவதற்கு கங்கனா ரணாவத் கூடுதல் அவகாசம் கோரியுள்ளாா். திங்கள்கிழமை அவா் ஆஜராக முடியாமல் போனதற்கு சில தனிப்பட்ட மற்றும் தொழில் முறை காரணங்களைக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், குழு முன் ஆஜராக புதிய தேதியை வழங்குமாறும் கோரியுள்ளாா். கங்கனா ரணாவத்தின் இந்தக் கோரிக்கையை குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அவா் ஆஜராவதற்கு புதிய தேதியை உரிய நேரத்தில் தெரிவிப்போம். இதற்கான தேதி பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா் ராகவ் சத்தா.