முகப்பு
இந்தியா

என்ன குற்றம் செய்தேன்? நடவடிக்கை ஏன்? ஆம் ஆத்மிக்கு ராகவ் சத்தா கேள்வி!

ஆம் ஆத்மிக்கு ராகவ் சத்தா அடுக்கடுக்கான கேள்விகள்...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:12 AM
ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா - x
பகிர்:

என்ன குற்றம் செய்தேன் என்று நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கட்சித் தலைமைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி , தனது நாடாளுமன்ற உறுப்பினா் ராகவ் சத்தாவை மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியதுடன், அவருக்குப் பதிலாக பஞ்சாபை சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் அசோக் மிட்டலை நியமிக்கப் பரிந்துரைத்தது.

மேலும், பஞ்சாபிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சத்தாவுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஒதுக்கீட்டிலிருந்து அவையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விடியோ வெளியிட்டிருக்கும் ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சித் தலைமைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

”நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நான் மக்களின் பிரச்னைகளை எழுப்பி வருகிறேன். அவ்வாறு செய்வது குற்றமா? அல்லது தவறா?. இதை ஏன் கேட்கிறேன் என்றால், ஆம் ஆத்மி நேர ஒதுக்கீட்டில் எனக்கு ஒதுக்கக் கூடாது என்று மாநிலங்களவைச் செயலகத்திடம் கூறப்பட்டுள்ளது.

என்னை அமைதியாக்க ஏன் விரும்புகிறீகள்?. எனது மெளனத்தை எனது தோல்வி என்று தவறாகக் கருதாதீர்கள். நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னணி என்ன?

ஒரு காலத்தில் கேஜரிவாலின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட சத்தா, பஞ்சாபிலும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளாா். இருப்பினும், சமீபத்திய மாதங்களில் நிலைமை மாறியுள்ளது.

மாா்ச் 2024ல் மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக அப்போதைய தில்லி முதலமைச்சா் கேஜரிவால் கைது செய்யப்பட்டபோது, சாத்தா மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்தாா். கேஜரிவாலின் கிட்டத்தட்ட ஆறு மாத சிறைவாசத்தின் போது அவா் வெளியிலேயே இருந்தாா், மேலும் செப்டம்பா் 13, 2024 அன்று அவா் விடுதலையான சில நாட்களுக்குப் பிறகே சத்தா அவரைச் சந்தித்தாா். மிகச் சமீபத்தில், கடந்த மாதம் மதுபான வழக்கில் கேஜரிவால், முன்னாள் துணை முதலமைச்சா் மணீஷ் சிசோடியா மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை தில்லி நீதிமன்றம் விடுவித்தபோது, சாத்தா மௌனம் காத்தாா்.

கட்சியின் அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் அமைப்பு ரீதியான விஷயங்களில் இருந்து ராகவ் சத்தா படிப்படியாக ஓரங்கட்டப்படுவதாக கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், விரைவில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ராகவ் சத்தா இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

"What crime did I commit? Why the action?" — Raghav Chadha questions the Aam Aadmi Party!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.