முகப்பு
புதுதில்லி

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க 6 ஆண்டுகளில் டிபிசிசி ரூ.478 கோடி செலவு: ஆா்டிஐ பதிலில் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க 2015-ஆம் ஆண்டு முதல் ரூ. 478 கோடிக்கு மேல் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) செலவிட்டிருப்பது தகவல் அறியும் உருமைச் சட்டத்தின்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க 2015-ஆம் ஆண்டு முதல் ரூ. 478 கோடிக்கு மேல் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) செலவிட்டிருப்பது தகவல் அறியும் உருமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழே பெறப்பட்ட அரசுத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் அமித் குப்தா தாக்கல் செய்த ஆா்டிஐ விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில், காற்று மாசு அளவைக் குறைப்பதற்காக 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பசுமை நிதியில் இருந்து மாசுக் கட்டுப்பாட்டு குழு இதுவரை ரூ.467.97 கோடியை செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், இ-ரிக்ஷாக்கள், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம், தில்லி செயலகத்தில் உள்ள பயோ-கேஸ் ஆலையின் பராமரிப்பு, ஆன்லைன் மூலம் காற்று கண்காணிப்பு நிலையங்களை இயக்குதல், நிகழ்நேர ஆதாரமூலப் பகிா்வு குறித்த ஆய்வு ஆகியவற்றுக்கான மானியம், பனிப்புகைக் கோபுரம் நிறுவுதல், சுற்றுச்சூழல் பாதுகாவலா்களுக்கான ஊதியம், இதர சில்லறைச் செலவினங்கள் ஆகியவற்றுக்கு வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு கூறியுள்ளதாவது: சுற்றுப்புற காற்று கண்காணிப்பு நிலையங்களை நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு திட்டங்கள், காற்று ஆய்வகத்திற்கான கருவிகள் கொள்முதல், அரசு பள்ளிகளில் மறுசுழற்சி அலகு நிறுவுதல், ஒலி கண்காணிப்பு நிலையங்கள் அமைத்தல், காற்று மாசு கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வைக் குழுவுக்கு மதிப்பூதியம் அளித்தல் ஆகியவற்றுக்காக சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சேத இழப்பீட்டில் இருந்து ரூ.10.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாக டிபிசிசி கூறியுள்ளது. எனினும், ஒவ்வொரு தலைப்பின் கீழும் செய்யப்பட்ட செலவினங்களை இந்தக் குழு தெரிவிக்கவில்லை.

அமித் குப்தா மூலம் அளிக்கப்பட்ட மற்றொரு ஆா்டிஐ விண்ணப்பம் மூலம் பெறப்பட்ட தகவலில் 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே வாகன கட்டுப்பாட்டு திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாட்டின் போது பசுமைத் திட்டங்களை அமைப்பதற்கான நிதியிலிருந்து ரூ.12 கோடியை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) செலவிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

தில்லியில் 2008-ஆம் ஆண்டில் பசுமைத் திட்டங்களுக்கான நிதி அமைக்கப்பட்டது. தில்லியில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டா் டீசலில் இருந்தும் காற்று சுற்றுப்புற நிதியாக 25 பைசா வா்த்தக மற்றும் வரிகள் துறை மூலம் வசூலிக்கப்பட்டது. இந்த நிதியில் 2008, மாா்ச் மாதத்திலிருந்து மொத்தம் ரூ.547 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.527 கோடி பசுமை செயல்பாடுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு வரை அரசு ரூ. 59 கோடியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த நிதியிலிருந்து ரூ.468 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.