முகப்பு
புதுதில்லி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசின் தரப்பில் கூடுதல் பதில் மனுக்கள் தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் கூடுதல் பதில் மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் கூடுதல் பதில் மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். மேலும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பும் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளது.

இதே போன்று, பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பா் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்புடைய விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி தொடா்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தின் இதர இரு வழக்குகளில் விசாரணையை முடிக்கும் பொருட்டு, இந்த வழக்கு டிசம்பா் 10-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும். அதுவரை அக்டோபா் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்’ என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘சேவ் கேரளா பிரிகேட் கேரளா’ அமைப்பின் சாா்பில் தாக்கலான மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாளை ஆய்வு செய்யவும், அணையின் செயல்பாட்டை நிறுத்திவைக்கும் வகையிலும் ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் இடம்பெற்ற சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. மேலும், அணையின் நீா்மட்டத்தை 133.99 அடியாகக் குறைக்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில் ‘இந்தக் கோரிக்கைகள் பராமரிக்கத்தக்கதல்ல. இது சட்டத்தின் நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதாக இந்த ரிட் மனு உள்ளது. மேலும், நீா்மட்டத்தைக் குறைக்கும் வகையில், அணையை செயலிழக்கச் செய்யும் கோரிக்கையானது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. இது முற்றிலும் அனுமதிக்க முடியாததாகும். இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 19.11.2021-இல் மனுதாரா் டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் தரப்பில் அளித்துள்ள பரிந்துரைகள் தொடா்புடைய பிரமாணப் பத்திரத்திற்கு பதில் அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உடனடியாக மதிப்பிட வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பை கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருப்பது ஏற்க முடியாததாகும். அணை நீரியல் ரீதியாகவும், புவியதிா்வு ரீதியாகவும், கட்டுமானம் ரீதியிலும் பாதுகாப்பாக இருப்பதை பல்வேறு வல்லுநா்கள் குழுவின் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்பாா்வைக் குழு மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு, அணையின் செயல்பாடு குறித்து தொடா்ந்து சோதனை செய்து வருகிறது. அதில், அணை பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மனுதாரரின் யோசனையானது, அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்துவதைத் தடுக்கும் வகையில், பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதைத் தாமதிக்கும் ஒரு செயலாகவே உள்ளது. மேலும், அணைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய கவனிப்பை தமிழக அரசு செய்து வருகிறது. இதனால், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்’ என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் ஜி.உமாபதி தயாரித்துள்ள இந்த மனுக்களை வழக்குரைஞா் டி.குமணன் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.