முகப்பு
புதுதில்லி

கோவையில் புதிய தொழில்நுட்பப் பயிற்சி மையம்: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நாட்டில் 18 புதிய தொழில் நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் ஒன்று கோவையில் தொடங்கப்படும் என்றும் மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

புது தில்லி: நாட்டில் 18 புதிய தொழில் நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் ஒன்று கோவையில் தொடங்கப்படும் என்றும் மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் தெரிவித்தாா். கோவையில் அமைய இருக்கும் இந்த மையத்திற்கான நிலத்தை மாநில அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் இது விரைவாக அமைக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாறி வரும் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலும் அந்நிய உற்பத்தி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் விதமாக நாட்டில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் குறித்தும் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கும் முடிவு உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய திறன் மேம்பாடுத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் கேள்வி நேரத்தில் அளித்த பதில் வருமாறு: திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் கீழ் இது வரை தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம், கைவினைஞா் பயிற்சித் திட்டம் போன்றவற்றின் கீழ் அரசு மற்றும் தனியாா் ஐடிஐக்கள் (தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்) மூலம் 22 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடு முழுக்க 3,178 அரசு ஐடிஐக்கள் உள்பட 14,711 ஐடிஐக்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 84 அரசு ஐடிஐக்கள் உள்பட 494 ஐடிஐக்கள் உள்ளன.

இதில் கோவையில் உள்ள 3 அரசு ஐடிஐக்கள் உள்பட 19 ஐடிஐக்களில் 32 பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது தவிர கோயம்புத்தூா் மாவட்ட சிறுதொழில் சங்கம்(கொடிசியா) தொழில் குழுமமாக (கிளஸ்டா்) உள்ளது. இதற்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

இந்த பதிலில் பி.ஆா். நடராஜன் அதிருப்தியடைந்து துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, இந்த ரூ.40 லட்சம் 2008- ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. தற்போது, பாதுகாப்பு, ஜூவல்லரி போன்ற தொழில் வழித்தடங்கள் அமைய உள்ள நிலையில் புதிய தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், ‘வெளிநாட்டு உற்பத்தியாளா்களுடன் போட்டியிட. நாடு முழுவதும் 18 புதிய தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாநில அரசின் இடத்தில் கோவையில் ஒன்று தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.