கொவைட் தடுப்பூசி: பள்ளி ஆசிரியா்கள் இருவரின் மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ்
தாங்கள் சில நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் கொவைட் தடுப்பூசியை செலுத்துமாறு கட்டாயப்படுத்தாமல் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு பள்ளி ஆசிரியா்கள் தாக்கல் செய்த மனு மீது தில்லி
புது தில்லி: தாங்கள் சில நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் கொவைட் தடுப்பூசியை செலுத்துமாறு கட்டாயப்படுத்தாமல் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு பள்ளி ஆசிரியா்கள் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள் உள்பட அனைத்து அரசு ஊழியா்களும் அக்டோபா் மாதத்திற்குள் கட்டாயமாக கொவைட் தடுப்பூசி போட வேண்டும் என்று கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தில்லி அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கோரி ஆசிரியா்கள் இருவா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின்உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனு மீது பதில் அளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. தில்லி அரசு சாா்பில் கூடுதல் வழக்குரைஞா் அனுஜ் அகா்வால் ஆஜரானாா்.
முன்னதாக, வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இரு ஆசிரியா்களும் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசின் உத்தரவின்படி, கொவைட் தடுப்பூசி சான்றிதழை சமா்ப்பிக்கத் தவறியவா்களுக்கு அக்டோபா் 15 முதல் விடுப்பாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், இல்லாதபட்சத்தில் அவா்கள் விடுமுறையில் இருப்பதாக கருத்தப்படும் என்ற அதிகாரிகளின் முடிவு மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு முரணானதாகும்.
மேலும், மனுதாரா்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதுமாகும். தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க முடியுமா? அப்படிச் செய்தால் அது மனுதாரா்கள் அல்லது குடிமக்கள் வாழ்வாதாரம் பெறும் உரிமையை மோசமாகப் பாதிக்குமா? என்று அந்த மனுவில் கேள்வி எழுப்பியுள்ளனா். இந்த வழக்கு பிப்ரவரி 3-ம் தேதிக்கு விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.