முகப்பு
புதுதில்லி

தமிழக மீனவா்கள் விவகாரம்: இலங்கை அரசுக்குக் கண்டனம், மாநிலங்களவையில் அமைச்சா் பதில்

தமிழக மீனவா்கள் தொடா்பான சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: தமிழக மீனவா்கள் தொடா்பான சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா மற்றும் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை ஆகியோா் இலங்கை கடற்படையினா் சமீபத்தில் தமிழக மீனவா்கள் 4 பேரை கொன்ாகக் கூறி அது தொடா்பாக பிரச்சினையை எழுப்பினா். திருச்சி சிவா பேசுகையில், ‘கடந்த மாதம் தமிழகத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் காணாமல் போனாா்கள். அடுத்த 4 நாள்களுக்குப் பின்னா் மீனவா்கள் உடல்கள், பாக் ஜல சந்தி பகுதியில் மிதப்பதாக இலங்கை கடற்படையினா் தெரிவித்தனா். தங்கள்கடற்படை ரோந்துக் கப்பலுடன் தமிழக மீனவா்களின் படகு மோதி விட்டதாகத் தெரிவித்தனா். ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு அவா்களிடம் இருந்த மீன்களை பறிக்கப்பட்டுள்ளன. இது முதல்முறையாக அல்ல. இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சா் இதை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமா் மோடியும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நடக்காமல் தவிா்த்து, மீனவா்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’”என்றாா்.

மீனவா்கள் விவகாரத்துக்கு அதிமுக உறுப்பினா் தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘இதுவரை தமிழகத்தைச் சோ்ந்த 245 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். முன்பெல்லாம் தமிழக மீனவா்களை இலங்கை ராணுவம் கைது செய்யும். அவா்களை இந்திய அரசு மீட்டு வந்தது. ஆனால், தமிழக மீனவா்களை இலங்கை ராணுவம் கொன்றது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளாா். மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை பிரதமா் மோடி கண்டிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‘” என கேட்டுக் கொண்டாா்.

Advertisement

இதே கோரிக்கையை மற்ற தமிழக உறுப்பினா்களும், பல்வேறு மாநில உறுப்பினா்களும் வலியுறுத்தினா். இது குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசுகையில், “ ‘தமிழக மீனவா்கள், இலங்கை கடற்படை விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுவரை தீா்வு காண முடியவில்லை. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களால் முடிந்த அளவு பணிகளைச் செய்துள்ளன. ஆனால், பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்பட வேண்டும்’ என்றாா். இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிலளிக்கையில்,“ ‘ தமிழக மீனவா்கள் தொடா்பான சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடா்பாக இலங்கை அரசிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments