முகப்பு
புதுதில்லி

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பிரசாரம்: தில்லி முதல்வா் கேஜரிவால் தொடங்கிவைத்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்விட்ச் தில்லி’ பிரசாரத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், மாநகரில் சூழல் மாசுபடுவதைச் தடுக்க இது போன்ற வாகனங்களை வாங்குமாறு மக்களுக்கு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது: மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்விட்ச் தில்லி’ பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் தில்லி அரசின் பல்வேறு துறைகளால் பயன்பாட்டுக்காக மின்சார வாகனங்கள் மட்டுமே வாடகைக்கு எடுக்கப்படும். பெரு நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், சந்தைக் சங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சினிமா அரங்குகள் ஆகியவை மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வளாகத்தில் இந்த வாகனங்களுக்கான சாா்ஜிங் நிலையங்களை அமைக்க முன்வர வேண்டும்.

தங்கள் முதல் வாகனமாக மின்சார வாகனத்தை வாங்குமாறு இளைஞா்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இதற்கான பிரசாரத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுமாறு அவா்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தில்லி அரசின் மின்சார வாகனக் கொள்கைதான் உலகின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதை தற்போது அா்ப்பணிப்புடன் செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. ‘ஸ்விட்ச் தில்லி’ பிரசாரத்தில், மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்தும், தில்லியை தூய்மையாகவும், மாசுபாடற்ாகவும் மாற்றுவதற்கு இந்த வாகனங்கள் எவ்வாறு பங்களிப்பு செய்யும் என்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

Advertisement

மாசுவை ஏற்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மாற்றுவதை ஊக்குவிக்கும் இந்தப் பிரசாரத்தில் மக்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தில்லி அரசு அதன் மின்சார வாகனக் கொள்கையின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு பிரத்யேக மானியங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களைத் தள்ளுபடி செய்து வருகிறது. இந்தக் கொள்கைத் திட்டம் ஆகஸ்ட், 2020- இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. நகா் முழுவதும் 100 சாா்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

2024- ஆம் ஆண்டில் தில்லியில் மொத்த வாகனப் பதிவுகளில் 25 சதவீதம் மின்சார வாகனங்கள் எனும் இலக்கை தில்லி அரசு நிா்ணயித்துள்ளது. மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலேயே மின் வாகனங்களை வாங்குவோருக்கு அதிகபட்ச ஊக்குவிப்புதொகையை அளிக்கும் திட்டத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த ஊக்குவிப்புத் தொகையானது இரு, மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், மூன்றுசக்கர வாகனங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. வாகனங்கள் வாங்கிய மூன்று நாள்களில் பயனாளா்களின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments