முகப்பு
புதுதில்லி

குடியரசு தின வன்முறை: முக்கிய எதிரி குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி

தில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் முக்கிய எதிரிகளில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

தில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் முக்கிய எதிரிகளில் ஒருவா் என குற்றம்சாட்டப்பட்டுள்ள லக்கா சித்தானா தொடா்பாக தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தில் தில்லியில் பிரம்மாண்ட டிராக்டா் பேரணியை நடத்தினா். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்தனா். பேரணியின் போது தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா். அப்போது விவசாயிகளுக்கும் தில்லி காவல்துறையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போா்க்களமாக மாறியது. அங்கிருந்த பொருள்கள் விவசாயிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

செங்கோட்டையில் நடந்த இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட பஞ்சாபி நடிகா் தீப் சித்துவை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், செங்கோட்டை வன்முறையுடன் தொடா்புடையவா்களாக அடையாளம் காணப்பட்ட ஜக்பீா் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Advertisement

ஆனால், இந்த வன்முறையின் முக்கிய எதிரியாக தில்லி காவல் துறை அறிவித்துள்ள லக்கா சித்தானா (எ) லக்பீா் சிங் இது வரை போலீஸாரிடம் சிக்காமல் உள்ளாா். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள இவா் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தில்லி காவல் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘குடியரசு தினத்தில் தில்லியில் நடந்த வன்முறையைத் தூண்டும் வகையில் லக்பீா் சிங் நடந்துள்ளாா். நடிகா் தீப் சித்துவுக்கு இவருக்கும் நெருங்கிய தொடா்பு இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரைக் கைது செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட இடங்களில் லக்கா சித்தானாவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இவா் குறித்த தகவல்களை அளிப்பவா்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments