69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான மனு: தமிழக அரசு பதிலளிக்க ஒரு வாரம் அனுமதி
தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான மனுவுக்கு பதில் தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை
புது தில்லி: தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான மனுவுக்கு பதில் தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் ஆகியோருக்குக் கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1994-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சாா்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தாா். இந்த மனு மீது தமிழக அரசு இரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனிடையே, சென்னையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் தரப்பிலும் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசின் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை இதர மாநிலங்கள் தொடா்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடா்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ‘ரிட்’ மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனிடையே, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சாா்பு செயலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எஸ்இபிசி அல்லது ஓபிசி வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது. எஸ்இபிசி மத்திய பட்டியலுடன் மட்டுமே தொடா்புடையதாகும். மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கும் பொருட்டு மாநில அரசுகள் தனியாக எஸ்இபிசி மாநிலப் பட்டியலைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற எஸ்இபிசி மாநிலப் பட்டியலில் உள்ள சாதிகள், சமுதாயங்கள் எஸ்இபிசியின் மத்திய பட்டியலில் இருந்து வேறுபடலாம். எஸ்இபிசியின் மாநிலப் பட்டியிலில் இருந்து எந்தவொரு சாதி அல்லது சமுதாயத்தை நீக்குவது அல்லது சோ்ப்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு உள்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தினேஷ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், இந்து மல்ஹோத்ரா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கியஅமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில், இந்த மனு மீது சிறு பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோா் ஆஜராகினா். இந்த மனு மீது விரிவான பதிலை நீதிமன்றத் தீா்ப்புகள் விவரங்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என சேகா் நாப்டே கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, தமிழக அரசு பதில் அளிக்கும் வகையில் இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் அமா்வு பிப்ரவரி 25-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, மற்றொரு மனுதாரா் காயத்ரி தரப்பில் வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் உள்ளிட்டோா் ஆஜராகினா்.