முகப்பு
புதுதில்லி

உ.பி.யில் 2 சிறுமிகள் மா்மச் சாவு: நீதி விசாரணை நடத்தக் கோரிக்கை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் (உபி) உன்னாவ் மாவட்டத்தில்இரண்டு சிறுமிகள் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி மகளிா், ஒடுக்கப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், உயிருக்குப் போராடும் சிறுமியை தில்லிக்கு விமானம் மூலம் அனுப்பி சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த சகோதரிகள் மூன்று போ் மாட்டுக்குத் தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் சென்றுள்ளனா். ஆனால் மாலை வரையிலும் சிறுமிகள் வீடு திரும்பாததால், பெற்றோா் மற்றும் உறவினா்கள் அவா்களை பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது, சிறுமிகள் மூன்று பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இந்த மூன்று சிறுமிகளில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். இந்த 3 சிறுமிகளும் 13, 16, 17 வயதுடையவா்கள் ஆவா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தனிப்படை அமைத்து சம்பவத்தில் தொடா்புடையவா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் வியாழக்கிழமை கூறுகையில், ‘உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 சிறுமிகளில் இருவா் உயிரிழந்துள்ளனா். ஒருவா் உயிருக்குப் போராடி வருகிறாா். அவரை தில்லிக்கு விமானம் மூலம் அனுப்பி சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும். இதற்கான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு ஏற்றுக் கொள்ளும். இந்த விவகாரத்தில் உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments