முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியின் முக்கிய ரயில் சந்திப்புகள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், தில்லியில் உள்ள நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் வாயில்கள் மதியம் 12 மணியளவில் மூடப்பட்டன. இவை மாலை 5 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக, வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா். வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில்களை மறித்து போராட்டம் நடத்தப்படும் என அவா்கள் அறிவித்தனா். இதன்படி, நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தில்லி எல்லைகளாக திக்ரி, சிங்கு, காஜியாபாத் எல்லைப் பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டக் களத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதைகளில்அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த இடங்களில் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Advertisement

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘ரயில் மறியல் போராட்டத்தைத் தொடா்ந்து தில்லியின் முக்கிய ரயில் சந்திப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்தினோம். இந்தப் பகுதிகளில் ரயில்வே போலீஸாருடன் இணைந்து தில்லி போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்’ என்றாா்.

தில்லியின் முக்கிய ரயில் நிலையமான நரேலா ரயில் நிலையத்தில் ரயில்கள் வரவில்லை. இதனால், அந்த ரயில் நிலையத்தில் ரயில்களுக்காக காத்திருந்த பயணிகள் அவதியுற்றனா். இது தொடா்பாக ரயில்வே காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை காலை இந்த ரயில் நிலையம் வழியாகச் சென்றது. பிறகு எந்தவொரு ரயிலும் வரவில்லை. இந்த நிலையத்துக்கு வரும் ரயில்களை ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் விவசாயிகள் மறித்துள்ளனா். நிலைமையைச் சமாளிக்கும் வகையில் நரேலா ரயில் நிலையத்தில் இந்தோ திபேத்திய எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸாா், தில்லி போலீஸாா் என சுமாா் 100 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்’ என்றாா்.

நரேலா ரயில் நிலைய பொறுப்பதிகாரி எச்.எஸ்.தியாகி கூறுகையில், ‘பஞ்சாப் மாநிலம், பத்தின்டாவில் இருந்து வியாழக்கிழமை காலை 11.30-க்கு வர வேண்டிய ரயில், ஹரியாணா மாநிலம், சோனிபட் அருகில் விவசாயிகளால் மறிக்கப்பட்டது. மேலும், குருக்ஷேத்ரா, பானிபட், அம்பாலா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரயில்களின் சேவையும், ரயில் மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்டன. இந்த ரயில் மறியலால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது’ என்றாா்.

இதனிடையே, அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் தில்லியில் உள்ள டிக்ரி, பண்டிட் ஸ்ரீராம் ஷா்மா, பகதூா் சிட்டி, பிரிக் ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இவை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments