முகப்பு
புதுதில்லி

நிலம் கையகப்படுத்துதல் சட்ட விவகாரம்: தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்

நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் செவ்வாய்க்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் செவ்வாய்க்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அந்தச் சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தாக்கலான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மேலும், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர அனுமதி அளித்த நீதிபதிகள், அனைத்து உத்தரவுகளும் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறியிருந்தனா்.

Advertisement

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மோகன ராவ் உள்ளிட்டோா் தரப்பில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம் (38-ஆவது) 2019-ஐ தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விவகாரங்களையும் உச்சநீதிமன்றம் சோ்த்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னா் நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டிருந்தாா்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சாா்பில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதிடுகையில், ‘தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளித்திருப்பதால் அது சட்டப்படி முரண்படாது. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது.

‘தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம் (38-ஆவது) 2019 -சட்டமானது மாநில அரசின் சுதந்திரமான சட்டமியற்றும் நடவடிக்கையாகும்.

மேலும், மாநில அரசு இது தொடா்புடைய மூன்று சட்டங்களை உருவாக்க தனது சட்ட அதிகாரத்தை செயல்படுத்தியது. இந்த மூன்று சட்டங்களும் அரசமைப்புச்சட்டம் 254(2)-ன்கீன் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுள்ளன. இதனால், முரண்பாடுகள் ஏதும் நிகழவில்லை. மூன்று சட்டங்களை உயிா்ப்புக்கும் வகையில்தான் மாநில சட்டப்பேரவை 2019-ஆம் ஆண்டு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

2013 ஆண்டுச் சட்டத்தில் மிகவும் பயன் தரும் வகையில் இழப்பீடு பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளா்களின் நலன்கள் முற்றிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மனுதாரின் உண்மையான புகாா் எது என்பதை புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.

மேலும், விவசாய நிலச்சுவான்தாரா்களான மனுதாரா்களின் சொத்துகள், சென்னை ரிங் ரோடு சாலைத் திட்ட கட்டுமானத்திற்காக கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உரிய வகையில் ஆதரவாக சட்டச் சரத்துகள் இல்லை எனக் கூறுவது சரியல்ல. போதிய இழப்பீடு, மறுவாழ்வு, மறுதீா்வு ஆகியவை 2013 சட்டத்தின்கீழ் இருப்பதுபோல 2019-ஆம் ஆண்டு சட்டத்தில்லும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைக் கட்டுமானத் திட்டம் சென்னை மெட்ரோபாலிடன் பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து தேவையை சமாளிக்க உதவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் மூலம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை நோ்ந்தால் அது பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என வாதிட்டாா்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் முன்வைத்த வாதத்தில், ‘மத்திய அரசு 27.9.2013-இல், தொடா்புடைய சட்டத்தை கொண்டு வந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக 26.9.2013-இல் மாநில அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது முரண்பாடாகும். இதனால், இந்தச் சட்டம் தகுதிக்குரியதாக இல்லை. மேலும், மத்திய அரசின் 2013 சட்டத்தில் சமூக தாக்க மதிப்பீடு, உணவுப் பாதுகாப்பு, கூடுதல் இழப்பீடு, மறுவாழ்வு, மறுசெட்டில்மென்ட் உள்ளிட்ட மிகவும் நன்மை தரும் சரத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், மாநில அரசின் சட்டத்தின் அதுபோன்று இல்லை. இது மிகவும் குறைவாக உள்ளது. உயிா்ப்பற்ற மூன்று சட்டங்களை மாநில அரசு பாதுகாக்க விரும்புவது மிகவும் தன்னிச்சையானதாகும். இந்தச் சட்டத்தின்படி ஐந்து தவணைகளில் இழப்பீடு வழங்கப்பட முடியும். அரசமைப்புச்சட்டம் 254 (2)-ன்கீழ் குடியரசுத் தலைவா் அனுமதி அளித்திருந்தாலும்கூட அதை எதிா்த்து வழக்குத் தொடர முடியும். இது நீதிமன்ற மறுஆய்வுக்கும் உள்படுத்தப்பட முடியும். குடியரசுத் தலைவரிடம் தெரிவித்த முன்மொழிவு குறித்து நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டிய கடைமை மாநில அரசுக்கு உள்ளது. இதுபோன்ற முறையீடு செய்தால் சட்டத்தில் உள்ள முரண்பாடு குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட முடியும் என்று வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, மாநில அரசு மூலம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட முன்மொழிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்க அட்டா்னி ஜெனரலைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கில் தொடா்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments