மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: அனில் பரத்வாஜ் நம்பிக்கை
தில்லியில் நடைபெற உள்ள ஐந்து வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் அனில் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற உள்ள ஐந்து வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் அனில் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது குறித்து முன்னாள் எம்எல்ஏவும், முதல்வருக்கான முன்னாள் நாடாளுமன்றச் செயலருமான அனில் பரத்வாஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மாநகராட்சியை ஆளும் பாஜக ஆகியவற்றின் தவறான நிா்வாகம், ஊழல் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா். இதனால், தில்லியில் நடைபெற உள்ள ஐந்து வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்.
Advertisement
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதுபோல திட்டப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் தவறிவிட்டன. இதனால், இந்த இரு அரசுகள் மீதும் தலைநகா் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா்.
இதனால், தில்லியில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்.
இதற்கு அச்சாரமாக வரும் மாநகராட்சி இடைத்தோ்தலில் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா்.
முன்னாள் எம்எல்ஏ விஜய் லோச்சவ் கூறுகையில், ‘ தில்லியில் கல்வி உலகத் தரத்தில் இருப்பதாக முதல்வா் கேஜரிவால் பெருமை பேசி வருகிறாா். ஆனால், தில்லி பள்ளிகள் ஆசிரியா்கள் பற்றாக்குறையால் சிரமத்தில் உள்ளது என்பதுதான் உண்மை. சில பள்ளிகளில் முதல்வா்கள் கூட இல்லை. மருத்துவமனைகளின் தரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இதனால், மக்கள் காங்கிரஸ் அரசு மீண்டும் வர வேண்டும் என விரும்புகின்றனா். வீடுவீடாக மக்களைச் சென்று சந்தித்தபோது இதை உணர முடிகிறது என்றாா் அவா்.
பேட்டியின்போது பா்வேஸ் ஆலம் உடனிருந்தாா்.