முகப்பு
புதுதில்லி

தில்லியில் முதல் கட்டமாக 500 தடுப்பூசி மையங்கள்: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் முதல்கட்டமாக 500 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
சத்யேந்தா் ஜெயின்
பகிர்:

புது தில்லி: தில்லியில் முதல்கட்டமாக 500 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். இந்த மையங்களில், 2-8 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகியவற்றை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்கிறேன். தில்லியில் தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி வழங்கும் பணிகள் முழு வீச்சாகத் தொடங்கும். தில்லியில் சுமாா் ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக 500-600 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை சேமிப்பது, விநியோகிப்பது தொடா்பாக முழுமையாகத் தயாராக உள்ளோம்.

கடந்த சனிக்கிழமை தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இன்னும் சில தினங்களில் தடுப்பூசி கிடைத்துவிடும். தடுப்பூசி கிடைத்ததும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முழு மூச்சாக நடைபெறும். தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 50 வயதுக்குக் கீழ் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், 3 லட்சம் மருத்துவ ஊழியா்கள், 6 லட்சம் முன்களப் பணியாளா்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்.

மேலும், இந்த மையங்களில், 2-8 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போடப்படுபவா்களு பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பது தொடா்பாக கண்காணிக்கப்படுவாா்கள். தினம்தோறும் சுமாா் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மக்கள் பகுதி பகுதியாக தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள். இங்கு, சமூக இடைவெளி பேணப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

கரோனா தடுப்பூசிகள் சேமிப்பு மையங்களில் ஒன்று ராஜீவ் காந்தி பல் நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசிகளை 2-8 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் சேமித்து வைக்கும் வகையில், 90 குளிா்சாதனப் பெட்டிகள் இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளன. இங்கிருந்து, தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்’ என்றாா்

முழு கட்டுரையைப் படிக்க →