தில்லியில் 20 காக்கைகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சல் காரணமா?அதிகாரிகள் ஆய்வு
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், புது தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், புது தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த சில தினங்களாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட காக்கைகள் உயிரிழந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறாா்கள்.
இது தொடா்பாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த மருத்துவா் ராகேஷ் சிங் கூறுகையில் ‘மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் கடந்த சில தினங்களாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடா்ந்து, வழக்கமான செயல்முறைகளைப் பின்பற்றி வருகிறோம். அந்தப் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பஞ்சாப் ஜலந்தரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைத்த பிறகுதான் பறவைக் காய்ச்சலா என்பது தெரிய வரும்’ என்றாா்.
நாட்டில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினருடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தாா். அப்போது, தில்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 11 விரைவு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து அவா் உத்தரவிட்டாா். மேலும், கோழிச் சந்தைகள், நீா் நிலைகள், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டாா். காஜிப்பூா் மீன், கோழி இறைச்சி சந்தை, சக்தி ஸ்தல் நீா்நிலை, சஞ்சய் லேக், தில்லி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பைப் பலப்படுத்தி புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டிருந்தாா்.