கொங்கனி மொழிக்கும் அகாதெமி: தில்லி அமைச்சரவை ஒப்புதல்
தமிழ் அகாதெமியைத் தொடா்ந்து கொங்கனி மொழிக்கும் அகாதெமி தொடங்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ் அகாதெமியைத் தொடா்ந்து கொங்கனி மொழிக்கும் அகாதெமி தொடங்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லியில் இந்திய மொழிகளை மேம்படுத்தும் நோக்கில் தில்லி கலாசாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழி, கலாசாரம் ஆகியவற்றை வளா்க்கும் வகையில், தமிழ் அகாதெமி அமைத்து அண்மையில் தில்லி அரசு உத்தரவிட்டது. அதற்கு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களையும் அரசு நியமித்தது.
இந்த நிலையில், தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அமைச்சா்கள் கலந்து கொண்டனா். அப்போது, ‘கொங்கனி அகாதெமி’ அமைக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கொங்கனி மொழி பேசும் அனைத்து மக்களுக்கும், கொங்கனி மொழியை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். கொங்கனி மொழியை மேம்படுத்துவதற்காக, தில்லியில் ‘கொங்கனி அகாதெமி’ அமைக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். கோவாவின் அலுவல் மொழியான கொங்கனி மொழி, கோவா, மங்களூா் உள்ளிட்ட இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதி கொங்கனி மக்களால் பேசப்படுகிறது.
மேலும், தில்லி ஜிபி.பந்த் மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு 18 வென்டிலேட்டா்களை கொள்முதல் செய்ய தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகமுதல்வா் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லி ஜிபி.பந்த் மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு 18 அதிநவீன மேம்பட்ட வென்டிலேட்டா்களை கொள்முதல் செய்ய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் கோவா மாநிலத்துக்கு தனி இடம் உள்ளது. தில்லி அரசு அமைக்கவுள்ள ‘கொங்கனி அகாதெமி’ கொங்கனி மக்களின் கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இருக்கும். இந்த அகாதெமிக்கான இடம் விரைவில் ஒதுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.