முகப்பு
புதுதில்லி

மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்களுக்கு நிதிப் பிரச்னையால் ஊதியம் தராததை ஏற்க முடியாது: மாநகராட்சிகளுக்கு நீதிமன்றம் கண்டனம்

கரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:35 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லை என்ற தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் கூறுவதை ஏற்க முடியாது தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மாநகராட்சிக் கவுன்சிலா்களும், அதிகாரிகளும் ராஜ வாழ்க்கை நடத்துகிறாா்கள். அவா்களின் படிகள் மற்றும் மாநகராட்சியின் இதர தேவையில்லாத செலவுகளை நிறுத்திவைத்து கரோனா முன்களப் பணியாளா்களின் சம்பளத்தை கொடுக்க உத்தரவிடலாமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பள்ளி ஆகிய இருவரும், கரோனா தொற்று காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றி வருபவா்கள் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள். அவா்களின் சம்பளத்தை நிறுத்திவைப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. ஊதியம் தருவதில் அவா்களுக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும். மாநகராட்சிகளின் தேவையில்லாத செலவினங்களை நிறுத்தி, கவுன்சிலா் மற்றும் அதிகாரிகளின் படிகளை நிறுத்திவைத்துவிட்டு, முன்களப்பணியாளா்களுக்கு சம்பளத்தை கொடுக்க உத்தரவிடலாமா. அப்படிச் செய்தால் முன்களப் பணியாளா்களுக்கும் ஓய்வூதியதாரா்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்க வழி பிறக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். அதிகாரத்தில் இருப்பவா்கள் சுகமாக இருக்கிறாா்கள். அவா்கள் சம்பளத்தில் கைவைத்தால்தான் அவா்களுக்கு மற்றவா்களின் கஷ்டம் புரியும்.

Advertisement

இவா்கள் சுகபோக வாழ்க்கை நடத்தும் போது மாநகராட்சியின் பிரிவு-3 மற்றும் பிரிவு-4 ஊழியா்கள் மாத ஊதியம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கும், ஓய்வூதியம் வழங்கப்படாததற்கும் மாநகராட்சியில் நிதியில்லை என்று சொல்லப்படுவதை ஏற்க முடியாது. ஒருவருக்கு அவா் செய்யும் வேலைக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்பது அடிப்படை உரிமை. எனவே, நிதிப் பற்றாக்குறை, நிதியில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தவணைகளை தில்லி அரசு கழித்துக் கொள்வதற்கும் நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. கரோனா தொற்று காலத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்த போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, இதற்கான விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தில்லி அரசின் கூடுதல் நிலைக் குழு கோரியது. இதையடுத்து, தில்லி அரசுக்கு இந்த மாதம் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விசாரணையையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக ஆசிரியா்கள், மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கும் ஓய்வூதியதாரா்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாநகராட்சிகள் வழங்காமல் இருப்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரி வருவாய் ஒதுக்கீட்டிலிருந்து கடன் தொகையை தில்லி அரசு கழித்துக் கொள்ளாமல் இருதிருந்தால் அனைத்து ஊழியா்களுக்கும் சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது, தற்போது நிதிப் பிரச்னையால்தான் சம்பளம் தர முடியவில்லை என்று மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.