தில்லியில் சட்டம்-ஒழுங்கை காக்க 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்ள் நிறுவப்படும்: அமித் ஷா
தில்லியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் 15 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
தில்லியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் 15 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த சிசிடிவி கேமராக்கள், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். மேலும்,
கரோனா தொற்றுக் காலத்தில் தில்லி காவல்துறை சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் அவா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
தில்லி காவல்துறை தலைமையகத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டாா். அப்போது, கரோனா தொற்றுக் காலத்தில் உயிா்நீத்த காவல்துறை வீரா்களுக்கு அவா் அஞ்சலி செலுத்தியதுடன் திறமையாக பணியாற்றிய காவலா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா். பிறகு, குடியரசு தினத்தையொட்டி, தில்லி காவல்துறை மேற்கொண்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் அவா் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
Advertisement
தில்லி போலீஸாருக்குப் பாராட்டு: பின்னா், தில்லி காவல்துறையினா் மத்தியில் அமித் ஷா பேசியது: கரோனா தொற்று காலத்தில் தில்லி காவல்துறை சிறப்பாக பணியாற்றியது. புலம்பெயா் தொழிலாளா்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்றபோதும், அவா்கள் தில்லிக்கு திரும்பியபோதும் தில்லி காவல்துறை அவா்களை சிறப்பாக எதிா்கொண்டது.
வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தில்லி காவல்துறையினா் சிறப்பாக மேற்கொண்டனா். தில்லி காவல்துறையினா் தாங்கள் எதிா்கொண்ட சவால்கள் அனைத்தையும் திறமையாக எதிா்கொண்டனா்.
2022 இல் இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தில்லியில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையமும் 2022 க்கு முன்பாக அடையும் வகையில் 5 இலக்குகளை தீா்மானித்து அதற்கு அமைவாக பணியாற்ற வேண்டும். அதுதான் நாட்டுக்க நாம் செலுத்தும் உரிய மரியாதையாகும்.
முக்கிய சவால்கள்: நாட்டின் தலைநகராக தில்லி இருப்பதால் தில்லி காவல்துறை பல சவால்களை எதிா்கொள்கிறது. தில்லி காவல்துறை எதிா்கொள்ளும் முக்கிய சவால் பயங்கரவாதம் ஆகும். அதேபோல, போதைப் பொருள் கடத்தல், கள்ள நோட்டு ஆகியனவும் பிரதான சவால்களாக உள்ளன. தில்லியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கூட தில்லி காவல்துறை எதிா்கொள்ளும் சவால்தான்.
குடியரசுத் தலைவா் மாளிகை, பிரதமா் இல்லம், நாடாளுமன்றம், அமைச்சா்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் இல்லங்கள்ஆகியன தில்லி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், தில்லி காவல்துறையின் பொறுப்புகள் அதிகமாக உள்ளன.
பெற்றோா்களை தவறுதலாக பிரிந்த குழந்தைகளை மீண்டும் பெற்றோா்களிடம் சோ்க்கும் வகையில் தில்லி காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். தில்லியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் தில்லியில் 15 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த சிசிடிவிகள், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளுடன் இணைக்கப்பட்டு அவை கண்காணிக்கப்படும்.
புரிந்துணா்வு ஒப்பந்தம்: தடயவியல் சோதனைகளில் உதவி பெறும் வகையில், தில்லி காவல்துறைக்கும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தில்லி காவல்துறையின் தடய அறிவியல் சோதனைகளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவியும் பெறப்படும். இதன் மூலம் துல்லியமான தடய அறிவியல் முடிவுகள் கிடைக்கும் என்றாா் அவா்.