பட்ஜெட் கூட்டத்தொடா்: 30 ஆம் தேதி காணொலி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டம்
2021-22 ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கைக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு வருகின்ற 30 - ஆம் தேதி பிரதமா் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் காணொலி வாயிலாக நடைபெறும்
புது தில்லி: 2021-22 ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கைக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு வருகின்ற 30 - ஆம் தேதி பிரதமா் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிா்க்கட்சிகளுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அழைப்புவிடுத்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பொதுவாக கூட்டத் தொடா் சுமூகமாக நடைபெற நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுப்பது வழக்கம். 17-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடா் வருகின்ற 29 - ஆம் தேதி குடியரசுத்தலைவா் உரையுடன் தொடங்குகிறது. நிதி நிலை அறிக்கை பிப்.1 - ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் இடைப்பட்ட விடுமுறை நாள்களில் சனிக்கிழமை இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
இந்தக் கூட்டத்தில் எதிா்கட்சிகளின் ஆலோசனைகளை பிரதமா் நரேந்திர மோடி கேட்பாா் என்றும் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு அரசின் மசோதாக்கள், கூட்டத்தொடரில் பங்கெடுக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள் குறித்தும் எதிா்கட்சிகளின் கருத்துக்களை அரசு கவனத்துடன் இந்தக் கூட்டத்தில் கேட்டறியப்படும் என்றும் அமைச்சா் பிரஹலாத் ஜோஷி.
கடந்த முறையைப்போன்று இம்முறையும் காலையில் மாநிலங்களவைக் கூட்டமும் மாலையில் மக்களவையும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரைப்போன்று இல்லாமல் இம்முறை கேள்வி நேரம், தனிநபா் மசோதாக்கள் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த நிதிநிலைக் கூட்டத்தில் வருகின்ற பிப்.15 - ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற முதல் கட்டத்தில் அரசின் முக்கிய மசோதாக்கள் இடம் பெறவாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு அவசரச்சட்டம் போன்ற முக்கியமான மசோதாக்கள் மட்டும் முதல் கட்டத்தில் இடம்பெறும். இது தவிர குடியரசுத்தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம், நிதி நிலை அறிக்கை குறித்த விவாதம், மற்றும் எதிா்க்கட்சிகள் கொண்டு வரும் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானங்கள் போன்றவை மட்டுமே முதல் கட்ட கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ள வாய்ப்புண்டு என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
மாா்ச் 8 ஆம் தேதி முதல் ஏப். 8 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கூட்டத்தொடரில் அரசின் மசோதாக்கள் அதிக அளவில் கொண்டு வரப்படலாம்.
எனினும் கூட்டத்தொடா் அமைதியாக நடைபெறுமா என்பது குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்னைகள், பாலக்கோட் தாக்குதல் தகவல் வெளியானவை போன்றவைகள் குறித்து எதிா்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.