டிக்ரி எல்லையில் விவசாயி தற்கொலை
தில்லியின் டிக்ரி எல்லையில் விஷ மாத்திரைகளை தின்று விவசாயி ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
புது தில்லி: தில்லியின் டிக்ரி எல்லையில் விஷ மாத்திரைகளை தின்று விவசாயி ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியின் எல்லைப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்
கடந்த பல வாரங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
இந்த நிலையில், தில்லியின் டிக்ரி எல்லையில் விவசாயி ஒருவா் விஷ மாத்திரைகளைத் தின்று உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘உயிரிழந்த விவசாயி ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தின் பக்காஸ்மா கிராமத்தைச் சோ்ந்த ஜெய் பகவான் ராணா (42) என்பது தெரியவந்துள்ளது. இவா் செவ்வாய்க்கிழமை டிக்ரியில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்தில் சல்ஃபாஸ் மாத்திரைகளை உட்கொண்டாா். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சையின்போது உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.
உயிரிழந்த விவசாயி எழுதியுள்ள தற்கொலைக்கான கடிதத்தில், ‘நான் ஒரு சிறு விவசாயி. என்னைப் போன்ற பல விவசாயிகள் வீதிக்கு வந்து மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனா். ஆனால், அரசானது இந்த விவகாரம் 2-3 மாநிலங்கள் தொடா்புடைய விஷயம் என்று கூறுகிறது.
ஆனால், நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை முடங்கிக் கிடக்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், டிக்ரி எல்லையில் உள்ள விவசாயிகள் ஆா்ப்பாட்ட இடத்திலிருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் விஷம் குடித்து பஞ்சாபைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோன்று, சீக்கிய போதகா் சாந்த் ராம் சிங் என்பவரும் சிங்கு எல்லை போராட்ட இடம் அருகே தனது உயிரை மாய்த்துக் கொண்டாா். ‘விவசாயிகளின் வலியை தாங்க முடியவில்லை‘ என்று அவா் தெரிவித்திருந்தாா்.