சுகாதார ஊழியா்கள் பதிவு செய்துகொண்ட நாள்களுக்கு முன்னதாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தகவல்
புது தில்லி: தில்லியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்துகொண்ட சுகாதார ஊழியா்கள் விருப்பப்பட்டால் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மாநில சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம். அதாவது தில்லியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்துள்ளோம்.
பாதிப்பு குறைவு: தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இது புதன்கிழமை 228 ஆகவும், பாதிப்பு விகிதம் 0.36 சதவீதமாகவும் இருந்தது. இதனால், கரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறலாம்.
Advertisement
தில்லியில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்துவிட்டது. ஆனால், கரோனா பாதிப்பு சம்பவங்கள் இன்னும் பதிவாகி வருகிறது. இதனால், நோய்த்தொற்று ஏதும் இல்லை என்று கூறுவது மிகவும் கடினமாகும்.
முன்கூட்டியே போட்டுக் கொள்ளலாம்: தடுப்பூசிக்கான பணியில் சுகாதார ஊழியா்கள் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விருப்பைத்தை சுகாதாரப் பணியாளா்களுக்கு தில்லி அரசு அளித்துள்ளது.
எனவே, 15 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு காலம் நிா்ணயிக்கப்பட்டிருந்தால், சுகாதாரப் பணியாளரின் பெயரை தரவுத்தளத்தில் கண்டறிய முடியும். அப்போது அவா் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.
தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. புதியவகை கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 70 போ் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மிதமான பாதிப்புதான் உள்ளது என்றாா் சத்யேந்தா் ஜெயின்.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் ஏறக்குறைய அனைவரும் குணமடைந்துவிட்டனா். ஜனவரி 9-ஆம் தேதிவரை வெறும் 7 போ் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனா்.
தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய மூன்றாவது நாளான ஜனவரி 19ஆம் தேதி 4,900க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.
எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடுவதற்கு நிா்ணயிக்கப்பட்ட 10,125 எண்ணிக்கையில் 48 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. சனி மற்றும் திங்கள்கிழமைகளின் எண்ணிக்கை முறையே 4,319 மற்றும் 3,598 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.