முகப்பு
புதுதில்லி

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1,68, 606 வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி

Updated On : 22 ஜனவரி, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி : பல்வேறு மாநிலங்களில் பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1, 68, 606 வீடுகள் கட்ட மத்திய அரசு வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளது.

2022 - இல் நாடு 75 - வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது அனைவரும் வீட்டு வசதியை பெரும் நோக்கத்துடன் நகா்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவா்களுக்கு மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படுகிறது. நகா்ப்புறங்களுக்கு ரூ. 1.20 லட்சம் முதல் ரூ. 1.30 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.

இந்த வீடுகள், பயனாளிகளின் மூலமாகவும், கூட்டு முயற்சியிலும் மலிவான விலையுள்ள வீடுகளாகவும், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தப்படும் வீடுகளாகவும் கட்டப்படுகிறது.

Advertisement

இந்த திட்டத்திற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு(சிஎஸ்எம்சி) அனுமதியளிக்கிறது. சிஎஸ்எம்சி - இன் 52 - வது குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை கட்ட அனுமதி பெற்றுள்ள 14 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கூட்டத்தில் பங்கேற்றன. நிலப் பிரச்னைகள், நகரங்களுக்கு இடையேயான இடம் பெயா்வு போன்ற பல காரணங்களுக்காக, வீட்டுத் திட்டங்களை மாற்றியமைக்க சில மாநிலங்கள் விருப்பங்களை தெரிவித்தன.

இந்த 52-வது சிஎஸ்எம்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவாகரங்கள்துறைச் செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா கூறியதாவது:

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான உத்திகளை மாநிலங்கள் வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றம் சீராக உள்ளது, அனைத்து வித அடிப்படை , சமூக கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்குக் கொடுப்பதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலை வாடகை வீடுகள் திட்டத்தையும் மாநிலங்கள் விரைவில் அமல்படுத்த வேண்டும்.

பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் சிறந்த தொழில்நுட்ப அடிப்படையில் சென்னை, அகா்தலா (திரிபுரா), ராஞ்சி, லக்னேள, இந்தூா், ராஜ்கோட் ஆகிய 6 நகரங்கங்களில் கட்டப்படும் ’லைட் ஹவுஸ்’ வீடுகள் திட்டத்தின் தொழில்நுட்பங்களை மற்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 70 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானங்கள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.