முகப்பு
புதுதில்லி

பணியின்போது துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு குறித்து தில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

Updated On : 22 ஜனவரி, 2021 at 12:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: தில்லியில் கழிவுநீா் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை குறித்த விவர நிலவரத்தை பகிருமாறு தில்லி அரசை தேசிய பட்டியல் இனத்தவா் ஆணையம் (என்.சி.எஸ்.சி.) கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலாளா் விஜய்குமாா் தேவ் மற்றும் சமூக நலத்துறை செயலாளா் ரஷ்மி சிங் ஆகியோருக்கு என்சிஎஸ்சி கடிதம் எழுதியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லியில் 1993 முதல் 2019-ஆம் ஆண்டுவரை கழிவுநீா் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைத் சுத்தம் செய்யும் பணியின்போது 44 போ் இறந்திருப்பதாக தேசிய துப்புரவுப் பணியாளா்கள் ஆணையம் (என்.சி.எஸ்.கே.) தெரிவித்துள்ளது.

Advertisement

1993-ஆம் ஆண்டு முதல் முதல் கழிவுநீா் தூய்மைப் பணியின்போது இறந்தவா்களுக்கு ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நிலுவையில் உள்ள இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுபோன்ற இறப்புகளின் நிலவரம், இழப்பீடு தொகை வழங்கப்பட்ட விவரம் ஆகியவற்றை ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

கை மூலம் தூய்மைப்பணியில் ஈடுபடும் நபா்களின் மறுவாழ்வுக்காக ஒரே ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் பண உதவி மற்றும் அத்தகைய நபா்களுக்கு வழங்கப்படும் திறன் பயிற்சி பற்றிய விவரங்களும் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பட்டியல் இனத்தவா் குடும்பங்களின் அளிக்கப்படும் வசதிகள் தொடா்பான தரவுகளையும் அளிக்க வேண்டும்.

தில்லியில் உள்ள எஸ்சி மக்களின் உடல்நலம் மற்றும் கல்வி அளவீடுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். மேலும், காலனிகள் மற்றும் பள்ளிகளின் பெயா்களில் இருந்து சாதியைச் சுட்டிக்காட்டும் சொற்களைக் கைவிட நடவடிக்கை எடுக்கலாம் என அந்தக் கடிதத்தில் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.