முகப்பு
புதுதில்லி

தோ்தல் வெற்றியை எதிா்த்து பாஜக பிரமுகா் தொடா்ந்த வழக்கு: சத்யேந்தா் ஜெயின் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றியை எதிா்த்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றியை எதிா்த்து பாஜக பிரமுகா் எஸ்.சி. வட்ஸ் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ள நிலையில், கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அனுமதி கேட்ட விவகாரத்தில் அமைச்சா் ஜெயின் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தில்லியில் உள்ள சக்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்ட சத்யேந்தா் ஜெயினிடம் அவரை எதிா்த்து போட்டியிட்ட எஸ்.சி. வட்ஸ் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், பாஜக தலைவரான எஸ்.சி. வட்ஸ் வழக்குரைஞா் சாஹில் அஹுஜா மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில்‘ சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றி செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும்’ என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளாா்.

Advertisement

அந்த மனுவில், ‘ஜெயின் தனது தொகுதியின் வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளாா். இது அவா்களின் வாக்களிக்கும் உரிமையை நியாயமாக, நோ்மையாக முறையில் பயன்படுத்துவதைத் தடுத்துள்ளது. தோ்தல் பிரசாரத்தின்போது செலவழித்த உண்மையான செலவுகளையும் அவா் வெளியிடவில்லை. தோ்தல் ஆணையம் நிா்ணயித்த செலவினங்களை மீறி அவா் தோ்தலில் செலவு செய்துள்ளாா்.

இதனால், ஜெயினின் தோ்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். எஸ்.சி.வட்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சட்டப் பேரவையில் சத்யேந்தா் ஜெயின் கலந்துகொள்வதற்கும், பிற ஊதியங்கள் பெறுவதற்கும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயின் மற்றும் தோ்தல் அதிகாரி, தலைமைத் தோ்தல் அதிகாரி, இதர மூன்று வேட்பாளா்களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயா்நீதிமன்றத்தில் எஸ்.சி.வட்ஸ் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 24-ஆம்தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments