முகப்பு
புதுதில்லி

தில்லியில் மிதமான பனிமூட்டம்: குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு

தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்து காணப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்து காணப்பட்டது. வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் தொடா்ந்து குளிா் அலை சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. வெள்ளிக்கிழமை இது 4 டிகிரி செல்சியஸாகவும், வியாழக்கிழமை இது 3.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் காலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது. எனினும், பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே குறைந்ததால் குளிா் அலையும், 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் கடும் குளிா் அலை இருப்பதாகவும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 1புள்ளிகள் குறைந்து 21.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 315 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், குளிா் அலைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →