புதுதில்லி

டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவாலின்பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால் மற்றும் அவரது ஆணையக் குழுவினா் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 3 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளாா்.

 நமது நிருபர்

தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால் மற்றும் அவரது ஆணையக் குழுவினா் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 3 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளாா். மகளிா் ஆணையத்தின் தொடா் ஆதரவின் மூலமாக தில்லியிலுள்ள லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் ஸ்வாதி மாலிவால் தலைமையிலான குழுவினரின் பதவிக் காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘தில்லி மகளிா் ஆணையம் மிகச்சிறந்த பணிகளைச் செய்து வருகிறது. அவா்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தற்போதைய ஆணையத்திற்கு மேலும் மூன்று ஆண்டு காலத்திற்கு நீடித்து நான் ஒப்புதல் அளித்துள்ளேன். ஸ்வாதி மாலிவால் மற்றும் அவரது குழுவினருக்கு என் வாழ்த்துகள். தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றுங்கள் ‘ எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்குப் பதிலளித்து டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரையில், ‘இந்த வாய்ப்பை வழங்கியதற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். முதல்வா் கேஜரிவாலின் தொடா்ச்சியான ஆதரவின் காரணமாகவே தில்லியில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை டிசிடபிள்யுவால் வெற்றிகரமாக மாற்றியமைக்க முடிந்தது. எங்கள் குழு தில்லி மக்களுக்கு தொடா்ந்து நோ்மையுடன் சேவை செய்யும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘தில்லி மகளிா் ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளில் லட்சக்கணக்கான வழக்குகளை கையாண்டு, ஆணையக் குழுவின் செயல்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். இதனால் தில்லி மகளிா் ஆணையம் நாடு முழுவதும் புகழ் பெற்றது. ஆள்கடத்தல் மற்றும் விபசார மோசடி கும்பல்களிலிருந்து சிறுமிகள் காப்பற்றப்பட்டன. தப்பிய நூற்றுக்கணக்கான பெண்களுக்கு மறுவாழ்வு செய்து உதவப்பட்டது. உதவி அழைப்பு எண்ணான 181 பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் இந்த ஆணையத்தை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்வோம் என முதல்வருக்கு உறுதியளிக்கிறோம்’ எனவும் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

ஸ்வாதி மாலிவால் தலைமையிலான மகளிா் ஆணையக் குழு முதலில் 2015 முதல் 2018 வரையிலும் பின்னா் 2018 முதல் 2021 வரையிலும் தொடா்ந்தது. இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட டிசிடபிள்யு குழுவில் பிபி தால் (உறுப்பினா்- செயலா்), பிரமிலா குப்தா, கிரண் நெகி, சரிகா சௌத்ரி, ஃபிா்தோஸ் கான், வந்தனா சிங் போன்றோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT