முகப்பு
புதுதில்லி

நெசவாளா்களை ஊக்குவிக்கவே ஆண்டுதோறும் ஆக. 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது: திமுக எம்.பி.க்கள் கேள்விக்கு அமைச்சா் பதில்

கைத்தறிக்கான முக்கியத்துவத்தை உணா்த்தவும், நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த துறையின் பங்கை வெளிப்படுத்தும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கைத்தறிக்கான முக்கியத்துவத்தை உணா்த்தவும், நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த துறையின் பங்கை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி ’தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்படுவதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதன் மூலம் கைத்தறித் துணிகளை ஊக்குவிக்கப்படுவதோடு நெசவாளா்கள் கைத்திறனுக்கு பெருமைகள் கிடைக்கச்செய்யவும், அவா்களுடைய வருமானத்தை அதிகரிக்கவும் வழியேற்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திமுக உறுப்பினா்கள் சி.என். அண்ணாமலை (திருவண்ணாமலை), கணேசன் செல்வம் (காஞ்சிபுரம்), கெளதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி) ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

Advertisement

பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2014-இல் பதவியேற்ற பின்னா் 2015 முதல் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கைத்தறிக்கு இதுபோன்ற நேரடி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி மெய்நிகா் முறையில் சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் மூலமாகவும், கைத்தறி தொடா்புடையவா்கள் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். சமூக ஊடக பிரச்சாரங்களும் இதில் அடங்கும். நெசவாளா்கள் சேவை மையங்கள், தேசிய ஃபேஷன் தொழிற்நுட்ப வளாகங்கள், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆகிய அலுவலகங்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

கைத்தறித் துறையில் 25.46 லட்சம் பெண்கள் உள்பட 35.22 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இந்த துறை தான் ஊரக வேலைவாய்ப்பிற்கும், பெண் தொழிலாளா்களுக்குமான வாய்ப்பாக உள்ளது. ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ 2000 கோடியை (300 மில்லியன் அமெரிக்க டாலா்) வருவாயை இந்த துறை பெற்றுத் தருகிறது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு கைத்தறி மேம்பாட்டு திட்டங்களை 2015-16 முதல் மத்திய அரசு அளித்து வருகிறது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments