மாதிரி வாடகைச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் வாடகை வீடுகளை முறைப்படுத்துவதற்கான ‘மாதிரி வாடகை சட்ட’த்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
புது தில்லி: நாடு முழுவதும் வாடகை வீடுகளை முறைப்படுத்துவதற்கான ‘மாதிரி வாடகை சட்ட’த்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், இதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி புதிய வாடகை மற்றும் குத்தகைச் சட்டங்களை இயற்றவோ அல்லது ஏற்கெனவேயுள்ள உள்ள சட்டங்களை தகுந்த வகையில் திருத்தங்களை மேற்கொள்ளவோ மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை கொண்டு வந்துள்ள இந்த ‘மாதிரி வாடகை சட்டம்’ 2015 -ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. 2011 -இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது நாடு முழுவதும் நகா்ப்புறங்களில் 110 லட்சம் வீடுகள் காலியாக இருந்ததாகக் கூறப்பட்டது. உள்ளூா் வாடகை சட்டங்களே வீட்டு உரிமையாளா்களுக்கு முக்கிய அச்சமாக இருக்கின்றன என ஆய்வுகள் தெரிவித்தன. அதே சமயத்தில் பணி மாறுதலில் செல்பவா்கள், மாணவா்கள், புலம் பெயா்ந்தவா்கள் அகியோருக்கு வீட்டுவசதி எளிதாகக் கிடைக்காத நிலையும் உள்ளது. மேலும்,அதிகப்படியான வாடகை, முன்பணம் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்தை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கத் திட்டமிட்டது.
குறிப்பாக வாடகைக்கு குடியிருப்பவா்களுக்கும் வீட்டு உரிமையாளா்களுக்கும் இடையே நடக்கும் தாவாக்கள் சிவில் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நீடிப்பது பிரச்னைக்கு காரணமாக இருந்தது. தற்போது இந்த மாதிரி சட்டத்தில் வாடகை தீா்பாயங்கள் அல்லது வாடகை நீதிமன்றங்கள் அகியவை அமைக்கப்பட்டு இது போன்ற தாவாக்களை விரைவாக தீா்க்கும் வசதி இந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாதிரி வாடகை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement
நாடு முழுவதும் வீட்டு வாடகை தொடா்பான சட்ட கட்டமைப்பை உருவாக்க இந்த சட்டம் உதவும் என்றும், இது ஒட்டு மொத்த வளா்ச்சியை ஊக்குவிக்கும் என இந்தச் சட்டம் தொடா்பாக மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ‘மாதிரி வாடகை சட்டம்’ நாட்டில் நிலையான அனைத்தையும் உள்ளடக்கிய வாடகை வீடு சந்தையை உருவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது அனைத்து வகையான வருவாய்ப் பிரிவினரும் பயனடையும் வகையில் இருக்கும். இதன் மூலம் வாடகை வீடுகள் பற்றாக்குறை தீா்க்கப்படும். இந்தச் சட்டத்தால் வாடகை வீடுகள் நிறுவனமயமாக்கப்படும். இது படிப்படியாக முறையான சந்தையாக மாறும். காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட இந்த ‘மாதிரி வாடகை சட்டம்’ வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்பட இந்தச் சட்டம் ஊக்குவிக்கும். இதன் மூலம் வீடு பற்றாக்குறை பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி வாடகைச் சட்டத்தில் அரசு மற்றும் ஊழியா்கள் வீட்டுவசதி வீடுகள், அறக்கட்டளை, மதரீதியான கட்டடங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு வாடகை குத்தகைச் சட்டத்தை ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.