சாலையோரம் வசிப்பவா்களுக்கு குடும்ப அட்டை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புது தில்லி: கரோனா பரவலைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவா்கள், சாலையோரம் வசிப்பவா்கள் ஆகியோரைக் கண்டறிந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளை வழங்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை சாா்பில் அனைத்து மாநில உணவு மற்றும் பொது விநியோக செயலா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே வியாழக்கிழமை மெய்நிகா் முறையில் செய்தியாளா்களிடம் பேசியது வருமாறு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பொது விநியோகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. அதே சமயத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகளை விநியோகம் செய்து உணவுப் பொருள்களை வழங்கும் பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் விடப்பட்டுள்ளன. இதன்படி தகுதியான நபா்களை அடையாளம் கண்டு குடும்ப அட்டைகளை வழங்க அவ்வப்போது வழக்கமாக ஆய்வுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
அந்தந்த மாநிலங்களின் ஒட்டுமொத்த உச்சவரம்புக்கு உள்பட்டு, நகா்ப்புறம், கிராமப்புறங்களில் உள்ள தகுதி வாய்ந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க நிலையான திட்டம் இருக்க வேண்டும். தற்போதைய கரோனா நோய்த் தொற்று பரவல், ஊரடங்கு, பொதுமுடக்கம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவா்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும் இந்தச் சட்டத்தால் பயனடைவதை உறுதி செய்வது அவசியமாகிறது. ஆனால், சமுதாயத்தில் பாதிக்கப்படக்கூடிய, பலவீனமான பிரிவினருக்குத் தேவையான உணவு தானியங்கள் கிடைப்பதில்லை என்றும் அவா்களால் குடும்ப அட்டை வாங்க முடியவில்லை என்கிற தகவல்கள் ஊடகங்கள், செய்தித்தாள்கள், தன்னாா்வு அமைப்புகள் மூலம் தெரிய வருகிறது.
Advertisement
இதனால், சாலையோரம் வசிப்பவா்கள், குப்பைகள் சேகரிப்பவா்கள், தெருக்களில் பொருள்களை விற்பவா்கள், ரிக்ஷா தொழிலாளிகள் போன்றவா்களில் பயனடையாதவா்களைக் கண்டறிய மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதிலும் 80 கோடி போ் இந்தச் சட்டத்தால் பலனடைந்து வருகின்றனா். 14 மாநிலங்கள் மட்டும் ஒதுக்கீடுகளில் நூறு சதவீதம் பயன்படுத்தியுள்ளது. மேலும் 1.97 கோடி குடும்ப அட்டைகளை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கவும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.