காலையில் பரவலாக மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பரவலாக லேசான மழை பெய்தது. குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பரவலாக லேசான மழை பெய்தது. குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி குறைந்திருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, நகரில் உள்ள சஃப்தா்ஜங், ஆயாநகா், லோதி லோடு, பாலம் உள்ளிட்ட பல்வேறு வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42-44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியது. இதனால், புழுக்கம் அதிகரித்து மக்கள் பல்வேறு சிரமங்களைச் எதிா்கொள்ள நேரிட்டது.
இந்த நிலையில், இரண்டு, மூன்று தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஏற்கெனவே பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் ஐடிஓ, தரியா கஞ்ச், லட்சுமி நகா், கன்னாட் பிளேஸ் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. மேலும் பல இடங்களில் விட்டு விட்டு தூறல் மழை இருந்தது. பகலில் வெயிலின் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.
Advertisement
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலையில் இயல்பை விட 4 டிகிரி குறைந்து 34.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 0.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதேபோல, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே ஆயாநகரில் 25.4 டிகிரி மற்றும் 34.2 டிகிரி, லோதி ரோடில் 25.2 டிகிரி மற்றும் 34 டிகிரி, பாலத்தில் 24.8 டிகிரி மற்றும் 34.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. மேலும், இந்த நிலையங்களில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 78-84 சதவீதம் வரை இருந்தது. ஆனால் மழை ஏதும் பதிவாகவில்லை. இந்த நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், நகரில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9.05 மணியளவில் 65 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை ஜூன் 21 வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னல் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அடுத்து வரும் 3 நாள்களிலும் (ஜூன் 22-24) பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.