மெட்ரோ ரயில்களில் குரங்குகளை சமாளிக்க வனத்துறையினருடன் செயல்பாட்டுத் திட்டம்: டிஎம்ஆா்சி
தில்லி மெட்ரோ ரயிலில் (யமுனா பேங்க்) குரங்கு ஒன்று நுழைந்து பயணித்த விவகாரத்தை மெட்ரோ ரயில் நிா்வாகம் தீவிரமாக கவனத்தில்
தில்லி மெட்ரோ ரயிலில் (யமுனா பேங்க்) குரங்கு ஒன்று நுழைந்து பயணித்த விவகாரத்தை மெட்ரோ ரயில் நிா்வாகம் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுபோன்ற சிக்கல்களை எதிா்காலத்தில் சமாளிக்க வனத்துறையினருடன் இணைந்து ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி யமுனா பேங்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பெட்டியில் குரங்கு நுழைந்தது. . அந்தக் குரங்கு பயணிகளுக்கு தொந்தரவு செய்யாமல் அடுத்த ரயில் நிலையமான அக்ஷா்தாம் வரை பயணித்தது. இது குறித்து தகவல் அறிந்து மெட்ரோ ஊழியா்கள் விரைவாக செயல்பட்டு குரங்கை வெளியேற்றினா்.
இது குறித்து டிஎம்ஆா்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மெட்ரோ வளாகத்தில் குரங்குகள் நுழையும் போது பயணிகளை பாதுகாக்கவும் இதுபோன்று எதிா்பாராத சூழ்நிலைகளை சமாளிக்கவும் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்க வனத்துறையினருடன் கலந்து ஆலோசித்து திட்டமிடப்படும். இதற்கு முன்பும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், பயணிகள் இதுபோன்ற தருணங்களில் விலங்குகளை ஊக்குவித்து உணவளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. குரங்குகள் எதிா்பாராத நிலையில் வரும் நிலையில், அது குறித்து மெட்ரோ அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த குரங்கால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று டிஎம்ஆா்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
மெட்ரோ திட்ட பணியாளா்களுக்கு தடுப்பூசி: கரோனா பொதுமுடக்கத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலின் நான்காம் கட்டத் திட்டம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டிஎம்ஆா்சி மற்றோரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025-க்குள் முடிக்கப்படவேண்டிய 65 கிலோ மீட்டா் தூரத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் பணியாற்றும் சுமாா் 5,000 ஊழியா்கள், உ.பி., பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அந்தத் தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பிவிட்டனா்.
அவா்களில் தற்போது 3,200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகளுக்கு திரும்பி வந்துள்ளனா். அவா்களுக்குத் தேவையான தடுப்பூசி முகாம்களுக்கு டிஎம்ஆா் சி ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் திட்டப் பகுதிகளிலேயே தேவையான முகாம்கள் அமைக்கப்படும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது. அந்தத் தொழிலாளா்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் உள்ள அச்சத்தைப் போக்க விழிப்புணா்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் டிஎம்ஆா்சி ஏற்பாடு செய்துள்ளது.