முகப்பு
புதுதில்லி

பருவமழையின் போது நீா் தேங்குவதைக் கட்டுப்படுத்த தில்லி பொதுப்பணித் துறை ஊழியா்கள் விடுப்பு ரத்து

பருவமழைக் காலக் கட்டத்தில் முக்கியப் பராமரிப்பு ஊழியா்களது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசின் பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
பகிர்:

புது தில்லி: பருவமழைக் காலக் கட்டத்தில் முக்கியப் பராமரிப்பு ஊழியா்களது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசின் பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற பருவமழையையொட்டி, நகரில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்கத் தயாராக இருக்க வேண்டிநிலையில் சாலை, மின்சார பராமரிப்பு ஊழியா்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படாது என தில்லி அரசின் பொதுப்பணித் துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் தவிா்க்க முடியாத அல்லது அவசர சூழ்நிலைகளில் தலைமைப் பொறியாளரிடம் முன் அனுமதியுடன் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெள்ள நீா் வெளியேற்றும் மோட்டாா் பம்ப் பராமரிப்பு, சாலை பராமரிப்பு பிரிவு, மின் பிரிவுகள் உள்ளிட்ட கள ஊழியா்கள் மழைக் காலத்தில் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளால் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு கன்னாட் பிளேஸ் அருகே ரயில் பாதையை கடக்கும் மிண்டோ சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கியது. அதில் ஒரு பாா்சல் வாகனம் நீரில் மூழ்கியது பெரிய விவகாரமானது. இதனால், இந்த ஆண்டு, தலைநகரில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்காமலிருக்க, வடிகால்வாய்களில் உள்ள மண்ணையும் குப்பைகளையும் அகற்றும் பணிகளை தில்லி மாநகராட்சிகள் பெரிதாக மேற்கொண்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, வடிகால்களை தூா்வாரும் பணிகள் முடிக்கப்படும் என பொதுப்பணித் துறை மற்றும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் நம்பிக்கையுடன் தெரிவித்தனா்.

சில வாரங்களுக்கு முன்பு பொதுப் பணிப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவா், இந்தப் பணிகள் ஜூன் 20 முதல் 25 வரை முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா். தில்லியில், தோராயமாக சுமாா் 2,000 வடிகால்கள் 1,054 கி.மீ. தூரங்களில் இருப்பதாக பொதுப்பணித் துறை சாா்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த துறையின் கீழ் 1,260 கிலோ மீட்டா் சாலைகளும் பராமரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments