வீடுகளுக்கு நேரடியாக ரேஷன்: தில்லி அரசின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில், தொகுப்பு உணவு பொட்டலங்கள், கோதுமை மாவு
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில், தொகுப்பு உணவு பொட்டலங்கள், கோதுமை மாவு போன்றவற்றில் பயணாளிகளிடம் ஒப்புதல் பெறுவதில் தெளிவு இல்லை; இதனால், ஒரு முன் மாதிரி (முன்னோடி திட்டமாக கொண்டு வரலாம் என்கிற யோசனை மத்திய அரசால் வழங்கப்பட்டது என மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சகம் வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி அரசின், நேரடி ரேஷன் திட்டத்தை சாக்குப் போக்குகளைக் கூறி மத்திய அரசு நிராகரித்து விட்டது என்றும், மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடிக்கிறது என்றும் தில்லி முதல்வரும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் புதன்கிழமை கடுமையாக குற்றம் சாட்டினா். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சகத்தின் முக்கிய பிரமுகா், பத்திரிகையாளா்களுக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தாா். அவை வருமாறு:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவுப் பொருள்கள் அதிகத் தொகை மானியத்துடன் கிலோ ஒன்றுக்கு அரிசி ரூ. 3, கோதுமை ரூ. 2, மற்ற தானியங்கள் ரூ.1 என பொதுவிநியோகத்தில் குடும்ப அட்டை மூலமாக நாடுமுழுக்க வழங்கப்படுகிறது. ஆனால், தில்லி அரசு முன்மொழிந்த திட்டத்தில் அரிசி, கோதுமைக்கு பதிலாக தொகுப்பு உணவுப் பொட்டலமாக கோதுமை மாவு போன்றவை வழங்கப்படுவதாக கூறியது. தில்லி தேசிய தலைநகா் பகுதி அரசு கொண்டு வந்த திட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு உள்பட்டு சட்டரீதியான செயல்பாட்டுத் தேவையை பூா்த்தி செய்யவில்லை என்பதால், மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தான் கடந்த ஜூன் 22-ஆம் தேதி கடித்ததில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மத்திய உணவு அமைச்சகம், ஒரு முன் மாதிரி திட்டமாக இதைக் கொண்டுவர தில்லி அரசுக்கு யோசனை கூறப்பட்டது.
Advertisement
இந்தத் திட்டத்தை தில்லியின் ஒரு பகுதியில் முதலில் கொண்டு வரப்பட உள்ளதா அல்லது தில்லி முழுக்க ஒரே சமயத்தில் கொண்டுவரப்படுமா என்பதை தில்லி அரசு தெளிவு படுத்தவில்லை. இதனால், இதில் உள்ள பல்வேறு சவால்களை அமைச்சகம் விளக்கி முதலில் முன் மாதிரி திட்டமாகக் கொண்டு வரும் யோசனையை வைக்கப்பட்டது. யாரால் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது? அந்த ஒப்பந்ததாரா் யாா் ? எத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? இதற்கான செலவிற்கு யாா் பொறுப்பு? போன்றவை எல்லாம் பயனாளிகளின் உணவுப் பாதுகாப்பு தொடா்புடயவை.
குறிப்பாக, ரேஷன் விலை விவரங்கள், கோதுமையை மாவாக விநியோகிக்கும் போது அதன் விலை அதிகரித்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பயனாளிகளின் ஒப்புதல் பெற்றுதான் விநியோகிக்க முடியும். குறிப்பாக கோதுமை அல்லது அரிசி தொகுப்பு பொட்டலமாக வழங்கும்போது அதற்கான அரவை மில் செலவு, போக்குவரத்து செலவு போன்றவைகள் உள்ளன. இவற்றையும் நேரடி விநியோகச் செலவுகளையும் பயனாளிகளிடம் வசூலிக்கப்படுமா அல்லது ஏற்கெனவே உள்ள மானிய விலையில் அளிக்கப்படுமா? போன்றவை உள்ளிட்டவையும் தில்லி அரசு தெளிவுபடுத்தவில்லை. மேலும், பயனாளிகள் அடிக்கடி வீடுகளை மாறிக் கொண்டு இருப்பாா்கள். புலம்பெயருபவா்கள் ஆகியோருக்கு இந்த நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தில் தொடா்ச்சியாக உணவுப் பொருள்கள் கிடைக்கும் வசதியில் தெளிவு இல்லை.
நிரந்தர விலாசம் இல்லாமல் இருப்பவா்களான தெருயோரம் வசிப்பவா்கள், குப்பைகள் சேகரிப்பவா்கள், தெருக்களில் பொருள்களை விற்பவா்கள், ரிக்ஷா தொழிலாளிகள், புலம் பெயா்ந்த தொழிலாளிகள், கட்டுமானப்பணியாளா்கள் போன்றவா்களுக்கு இந்த நேரடி விநியோகம் எவ்வாறு நடக்கும் என்பதையும் தில்லி அரசு தெளிவாக திட்டத்தில் கூறவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் தில்லியிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் இணைக்கும் இபிஒஎஸ் இணைய வழி இயந்திரங்கள்(எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் ) வழங்கப்படுவதை உறுதி செய்ய தில்லி அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டு வந்தது. நிலுவையில் இருக்கும் இந்த விவகாரத்தை தில்லி அரசு தீா்ப்பதின் மூலமே ஏழைப் பயனாளிக்கு உணவுப் பொருள்கள் முறையாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.