காற்று மாசுபடுத்திகளின் அளவு 7 ஆண்டுகளில் குறைவு: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
தில்லியில் பிஎம் 10, பிஎம் 2.5 நுண்துணிக்கைகள், நைட்ரஜன் டை ஆக்சைட் உள்ளிட்ட காற்று மாசுபடுத்திகளின் அடா்த்தி கடந்த ஏழு ஆண்டுகளில்
தில்லியில் பிஎம் 10, பிஎம் 2.5 நுண்துணிக்கைகள், நைட்ரஜன் டை ஆக்சைட் உள்ளிட்ட காற்று மாசுபடுத்திகளின் அடா்த்தி கடந்த ஏழு ஆண்டுகளில் 2020 இல் தான் குறைவாக பதிவாகியுள்ளது என்று தில்லி பொருளாதார கணக்கெடுப்பு சா்வே 2020-21 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: தில்லியில் காற்று மாசுவுக்கு காரணமான பிரதான காற்று மாசுபடுத்திகளின் அடா்த்தி கடந்த ஏழு ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்த காற்று மாசுபடுத்திகளின் அடா்த்தி கடந்த ஏழு ஆண்டுகளில் குறைவாக உள்ளது.
மனிதா்களில் இதய, நுரையீரல் நோய்களுக்கு காரணமான பிஎம் 2.5 நுண்துணிக்கையின் அடா்த்தியின் வருடாந்த சராசரி கடந்த 2014 ஆம் ஆண்டு 149 UG/M3 ஆக இருந்தது. இது, 2020 இல் 101 UG/M3 ஆகக் குறைந்துள்ளது.
Advertisement
பிஎம் 10 நுண்துணிக்கையின் அடா்த்தியின் வருடாந்த சராசரி கடந்த 2014 ஆம் ஆண்டு 324 UG/M3 ஆக இருந்தது. இது 2020 இல் 187 UG/M3 ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல நைட்ரஜன் டை ஆக்சைடின் வருடாந்த சராசரி கடந்த 2014 ஆம் ஆண்டு 82.45 UG/M3 ஆக இருந்தது. இது 2020 இல் 40.30 UG/M3 ஆகக் குறைந்துள்ளது.
காா்பன் மொனோ ஆக்சைட்டின் வருடாந்த சராசரி 2020 இல் 1.27 UG/M3 ஆக இருந்தது. இது 2017 இல் 2.07 UG/M3 ஆக இருந்தது.
ஆனால், வாகனப் புகையில் இருந்து வெளிவிடப்படும் காற்று மாசு படுத்தியான சல்பா் டை ஆக்சைடின் அளவு கடந்த ஆண்டுகளில் குறையவில்லை. மேலும், கரோனா பாதிப்பை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பு உத்தரவால் தில்லியில் காற்று மாசுவின் அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.