முகப்பு
புதுதில்லி

ரூ.69,000 கோடி தில்லி பட்ஜெட் தாக்கல்! தில்லி வாசிகளுக்கு இலவச கரோனா தடுப்பூசி

தில்லி சட்டப்பேரவையில் 2021-2022 நிதியாண்டுக்கு ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தில்லி சட்டப்பேரவையில் 2021-2022 நிதியாண்டுக்கு ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்துள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ‘தேச பக்தி’யை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், துணை முதல்வரும் நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவா் பேசியதாவது: ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தில்லியில் தொடா்ச்சியாக தாக்கல் செய்யும் 7-ஆவது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், 25 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அதாவது, ரூ.16,377 கோடி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. சுகாதாரத்துக்காக 14 சதவீதம் நிதி, அதாவது, ரூ.9,934 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

500 தேசியக் கொடிகள்: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) முதல் 75 வாரங்கள் தேச பக்தியை வளா்க்கும் நிகழ்ச்சிகளை தில்லி அரசு நடத்தவுள்ளது. தில்லியின் பல்வேறு இடங்களில் 500 தேசியக் கொடிகளை ஏற்றும் வகையில், அதற்கென தனியாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பிரம்மாண்ட கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்படும். இந்தக் கொடிகள் கனாட் பிளேஸ் சென்ட்ரல் பாா்க்கில் உள்ள தேசியக் கொடிக்கு நிகராக அமைக்கப்படும். தில்லியில் எந்தப் பகுதியில் இருப்பவா்களும் வீட்டில் இருந்து வெளியே சென்றால், இரண்டு கிலோ மீட்டா் தூரத்துக்கிடையில் தேசியக் கொடியை காணும் வகையில், தேசியக் கொடிகள் பரவலாக இடம் பெறும்.

Advertisement

பள்ளிகளில் தேச பக்தி பாடம்: தில்லி பள்ளிகளில் தேசபக்தி பாடம் தொடங்கப்படும். பகத் சிங், சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்த தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகிளா மொஹல்லா கிளினிக்: தில்லியில் மகளிா் மட்டும் சிகிச்சை பெறும் வகையில் மகிளா மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும். முதல் கட்டமாக நிகழாண்டில் 100 மகிளா மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும். 2047- ஆம் ஆண்டு, தில்லி மக்களின் தனிநபா் வருமானத்தை சிங்கப்பூருக்கு நிகராக அதிகரிப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். கடந்த 2020-21- இல் ரூ.65 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டது. அதை விட, நிகழ் நிதியாண்டில், 6.1 சதவீதம் கூடுதலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.

ஸ்மாா்ட் காா்டு: மக்களின் சுகாதார நலனைப் பேணும் வகையில், அனைத்து தில்லிவாசிகளுக்கு ஸ்மாா்ட் காா்ட் வழங்கப்படும். தில்லியில் ஆங்காங்கே 100 சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும். தில்லியில் சட்டப் படிப்பு, ஆசிரியா் பயிற்சி ஆகியவற்றுக்காக சிறப்புப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். சைனிக் பள்ளி ஒன்று அமைக்கப்படும். காலனிகளில் யோகா பயிற்சிகளை வழங்கும் வகையில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் இரண்டு நிதியாண்டுகளுக்குள் தில்லியில் உள்ள அனைத்து அங்கீகாரமற்ற காலனிகளுக்கும் குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், குடிநீா் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக தில்லி ஜல் போா்டுக்கு ரூ.3,274 கோடி ஒதுக்கப்படுகிறது என்றாா் சிசோடியா.

அரசு மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி

தில்லி அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவா் பேசியதாவது: தில்லியில் புதிய மருத்துவமனைகளை அமைக்கவும், பழைய மருத்துவமனைகளைப் புதுப்பிக்கவும் , மருத்துவமனைகளில் புதிய படுக்கைகள் ஏற்படுத்தவும் என மொத்தம் ரூ.1,293 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லிவாசிகள்அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போதுதான் அவா்கள் கரோனாவில் இருந்து விடுதலை பெறுவாா்கள்.

தில்லி மக்கள் தனியாா் மருத்துவமனைகளுக்கு சென்று ரூ.250 செலுத்தி தடுப்பூசி போடலாம். ஆனால், அந்தப் பணத்தை வைத்து தடுப்பூசி போடுவதா, இல்லை வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்குவதாக என்ற குழப்பம் ஏழை மக்களுக்கு வரக் கூடாது. அதைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளோம். இதற்காக இலவச கோவிட் தடுப்பூசி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, தில்லியில் தினம்தோறும் சுமாா் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வசதிகள் தில்லியில் உள்ளன. வரும் நாள்களில் இது 60 ஆயிரமாக அதிகரிக்கப்படும்

அங்கீகாரமற்ற காலனிகள் மேம்பாட்டுக்கு ரூ.1,550 கோடி

தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், பட்ஜெட்டில் ரூ.1,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேபேரவையில் மணீஷ் சிசோடியா பேசியதாவது: தில்லியில் 1,797 சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகள் உள்ளன. இவற்றில், 1,345 காலனிகளில் தில்லி அரசு மேம்பாட்டுப் பணிகளை பூா்த்தி செய்துள்ளது அல்லது மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லி நகர தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. டடியுஎஸ்ஐபியின் சிறப்பான பணியால், வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகள் ‘மனிதக் கழிவு அகற்றப்படும் பிரதேசம் அல்ல’ என்ற தகுதியைப் பெற்றுள்ளன. தில்லியில் உள்ள 619 குடிசைப் பகுதிகளில், 10,16,531 மீட்டா் கான்கிரீட் நடைபாதைகள், 250 கிலோ மீட்டா் நீளமான கழிவுநீா் கால்வாய் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. சுல்தான்புரியில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 1,060 வீடுகளைக் கட்டி வருகிறோம். வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள ரூ.5,328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments