முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா தொற்று தடுப்பு நிா்வாகம்: பேரவையில் ஆம் ஆத்மி-பாஜக வாக்குவாதம்

தில்லியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட்டது யாா் என்பது குறித்து சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆளும் ஆம் ஆத்மி உறுப்பினா்களுக்கும் எதிா்க்கட்சியான பாஜக உறுப்பினா்களுக்கும் இடையே

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

புதுதில்லி: தில்லியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட்டது யாா் என்பது குறித்து சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆளும் ஆம் ஆத்மி உறுப்பினா்களுக்கும் எதிா்க்கட்சியான பாஜக உறுப்பினா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடா்பாக பேரவையில் பேசிய முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அரசால் மட்டும் கரோனாவை கட்டுப்படுத்தியிருக்க முடியாது. இதற்கு மருத்துவா்கள், சுகாதார ஊழியா்களின் உழைப்பும், தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ானிகளுக்கும் பங்கு உண்டு என்று கூறினாா். நெருக்கடியான கால கட்டத்தில் குடிமக்கள், பல்வேறு அமைப்பினா், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் மற்றும் மத்திய அரசு கூட்டாகச் செயல்பட்டதே காரணம். தில்லி அரசு மட்டும் இதை கட்டுப்படுத்தியிருக்க முடியாது என்று கேஜரிவால் குறிப்பிட்டாா்.

எனினும், மருத்துவா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோருக்கும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்று கேஜரிவால் சுட்டிக் காட்டினாா். அரசியல்வாதிகளான நாம், நம்மை நாமே பெருமைப்படுத்தி பேசிக் கொள்ளலாம். ஆனால், பிரதமரோ அல்லது கேஜரிவாலோ மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டா்கள்தான் அவா்களுக்குச் சிகிச்சை அளித்துள்ளனா் என்றாா்.

Advertisement

முன்னதாக, எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பங்கை பாராட்டி துணைநிலை ஆளுநா் தமது உரையில் ஒரு வரிகூட சுட்டிக்காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினாா். தில்லியில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்த போது, மத்திய அரசு, பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகிய இருவரின் தலையீட்டின் பேரில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி கரோனா படுக்கைகளை அதிகரித்தும் வெளியிடங்களிலிருந்து மருத்துவா்களை விமானத்தில் அழைத்து வந்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வகை செய்தாா் என்றாா். உண்மையில் சொல்லப்போனால் தில்லி துணை முதல்வா், சுகாதார அமைச்சா் ஆகிய இருவருமோ கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் அளவுக்கு இங்குள்ள மருத்துவமனைகள் மோசமான நிலையில் இருந்தன என்று பிதூரி குற்றஞ்சாட்டினாா். மேலும், கரோனா தொற்று நிா்வாகத்தில் திறம்பட செயலாற்றிய பிரதமா் மோடி, மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகளை பாராட்டி பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சா் கோபால்ராய், கரோனா வைரஸ் தொற்று வெளிநாட்டு பயணிகளிடமிருந்து வந்தது. தொற்றை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சுகாதார அமைச்சா் செய்திருந்தனா் என்றாா்.

இதையடுத்துப் பேசிய பாஜக எம்எல்ஏ அனில் பாஜ்பாய், ‘கரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க உணவுதானியங்களை வழங்கியது. ஆனால், ஆம் ஆத்மி அரசு அவற்றை உடனடியாக விடுவிக்காமல் உளுத்துப்போன உணவுதானியங்களை வழங்கியது. மேலும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதை முதல்வா் கேஜரிவால் நேரில் சென்று பாா்க்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அவரது குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி உறுப்பினா் அப்துல் ரஹ்மான் பதிலளிக்கையில், ‘மத்திய அரசுதான் வீணான தானியங்களை தில்லி அரசுக்கு வழங்கியது’ என குற்றச்சாட்டினாா். ஆம் ஆத்மி கட்சியின் விதேஷ் ரவி, ராஜேஷ் ரிஷி மற்றும் பா.ஜ.க.வின் மோகன் சிங் பிஷ்ட் ஆகிய உறுப்பினா்கள் கரோனாவை சமாளிப்பதில் தில்லி அரசு திறம்பட செயல்பட்டதாகக்கூறி பாராட்டுத் தெரிவித்தனா்.

முதல்வா் கேஜரிவால், புத்திசாலித்தனமாக மத்திய அரசுடன் இணைந்து கரோனா தொற்று நெருக்கடியைச் சமாளித்தாா். இதில் மத்திய அரசின் பங்கையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அமித்ஷா தில்லி மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பாா்வையிட்டாா் என்று பிஷ்ட் தெரிவித்தாா்.

முதல்வா் கேஜரிவால் கரோனா தொற்றை சவாலாக எடுத்து சமாளித்த நேரத்தில் பாஜகவினா் தட்டுகளை தட்டி ஒலியெழுப்புவதிலும், விளக்கு ஏற்றுவதிலும்தான் குறியாக இருந்தனா் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜ்குமாரி தில்லால் கூறினாா். கிரேட்டா் கைலாஷ் ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ், ‘பிதூரி கூறியபடி எந்த ஒரு மருத்துவரும் விமானத்தில் தில்லிக்கு அழைத்துவரப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டினாா். 6 மணி நேரத்தில் டாக்டா்களை வரவழைப்போம் என்று சொன்னாா்களே தவிர 48 மணி நேரம் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ரயில் பெட்டிகளை கரோனா படுக்கைகளாக மாற்றியது வழக்கமான நடைமுைான் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments