அனைவருக்கும் தடுப்பூசி வழங்க விதிமுறைகளில் தளா்வு: மத்திய அரசிடம் தில்லி முதல்வா் கோரிக்கை
புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் தடுப்பூசி விதிமுறைகளில் மத்திய அரசு தளா்வுகளைக் கொண்டுவர வேண்டும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தில்லியில் தற்போது சுமாா் 500 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில், தினம்தோறும் சுமாா் 30முதல் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வரும் நாள்களில் இந்த தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கையை 1000 -மாக அதிகரிக்கவுள்ளோம். இதன்மூலம், தினந்தோறும் சுமாா் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடக் கூடியதாக இருக்கும். தனியாா், அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அரசு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இந்த மையங்களில் தடுப்பூசி வழங்கும் நேரத்தை மேலும் 4 மணி நேரம் அதிகரிக்கவுள்ளோம். இந்நிலையங்களில், காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும். இதன்மூலம் கூடுதலான மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
Advertisement
ஆனால், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய் உடையவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசின் விதிமுறைகளில் தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தடுப்பூசி போடுவதில் தில்லி அரசுக்கு தற்போது 2 மாத அனுபவம் உள்ளது. இந்நிலையில், அனைவரையும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்து, தில்லிக்கு தேவையான போதுமான தடுப்பூசிகளை வழங்கினால், ஒட்டுமொத்த தில்லி மக்களுக்கும் 3 மாதத்தில் தடுப்பூசி போட்டுவிடுவோம். விரும்பிய அனைவரும் வந்து தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி விதிமுறைகளில் தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.