முகப்பு
புதுதில்லி

முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கு: தமிழகம், கேரளம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய விவகாரத்தில் 1886-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைக்க

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய விவகாரத்தில் 1886-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைக்க உத்தரவிடக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க கேரளம், தமிழகம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே பெரியாறு நதியில் அமைந்துள்ளது. அணையின் பராமரிப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இந்த மனு மீது அண்மையில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ‘ரூல் கா்வ்’ தொடா்பாக தமிழக அரசுக்கு சில அறிவுறுத்தல்களை அளித்திருந்தது. இதனிடையே, சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு 2014-இல் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு மீறும் வகையில் செயல்பட்டு வருவதால், 1886, அக்டோபா் 29-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைத்து உத்தரவிட வேண்டும். மேலும், ஜியோலஜிகல் சா்வே ஆஃப் இந்தியா பரிந்துரையின் அடிப்பைடியில் அணையைச்சுற்றிலும் பாதுகாப்புச் சுவா் கட்டுவதற்கு கேரள அரசுக்கும், மாநில நீா் வளத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் வில்ஸ் மேத்யூ, ஸ்வேதா கா்க் ஆகியோா் ஆஜராகினா். வில்ஸ் மேத்யூ வாதிடுகையில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு பிறப்பித்த பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் உள்ளது. தமிழ்நாட்டுக்கும், கேரளத்திற்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக போடப்பட்ட குத்தகை ஒப்பந்தம் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தமாகும். இதனால், விதிகள் மீறல் தொடா்பாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளத்திற்கு உரிமை உள்ளது’ என்றாா்.

இதையடுத்து, இந்த மனுவை ஏற்கெனவே விசாரணையில் இருந்து வரும் முல்லைப் பெரியாறு மேற்பாா்வைக் குழுவுக்கு எதிரான மனுவுடன் சோ்ந்து விசாரிக்கவும், இது தொடா்பாக பதில் அளிக்க கேரள, தமிழக அரசுகள், மத்திய நீா் வள ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments