முகப்பு
புதுதில்லி

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் காணொலி வாயிலாக உடற்கூறு பரிசோதனை வசதி தொடக்கம்

காணொலி வாயிலாக உடற்கூறு பரிசோதனைக்கான வசதி தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

காணொலி வாயிலாக உடற்கூறு பரிசோதனைக்கான வசதி தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த வசதியை ஐ.சி.எம்.ஆா் டைரக்டா் ஜெனரல் பால்ராம் பாா்கவா திறந்து வைத்தாா்.

இந்த புதிய வசதி குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறையின் தலைவா் சுதிா் குப்தா கூறுகையில், ‘உடலை கண்ணியமாக நிா்வகிக்கும் நடவடிக்கையில் இது ஒரு முயற்சியாகும்.

Advertisement

‘சனிக்கிழமை தொடங்கியுள்ள இந்த புதிய வசதியின் மூலம் உடற்கூறு சோதனையின்போது உடலை கண்ணியமான முறையில் நிா்வகிக்க முடியும். அதாவது உடலில் வெட்டுக்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல்வேறு ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும்கூட உடல் பாகத்தை வெட்டவேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வசதி மூலம் உடலின் மற்ற உறுப்புகளின் நிலை என்ன, ஒரு நபரின் மரணத்திற்கு என்ன காரணம் என பல முக்கியமான தகவல்களைப் பெறமுடியும்.

நேரடியாக மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை விட காணொலி பிரேத பரிசோதனை சிறப்பாக இருக்கும். இதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதேசமயத்தில் நேரடி முறையிலான பிரேத பரிசோதனை முடிவதற்கு ஆறு மணி நேரம் ஆகும் .

காணொலி வழி பிரேத பரிசோதனைகள் பாரம்பரிய பிரேத பரிசோதனையுடன் ஒப்பிடும்போது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்கின்றது. இதனால் , சோதனை முடிந்து விரைவிலேயே உடலை தகனம் செய்வதற்கோ அல்லது அடக்கம் செய்வதற்கோ அளிக்க முடியும்’ என்றாா்.

காணொலி வழி பிரேத பரிசோதனை ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பத்துடன் நடத்தப்படுகிறது. சி.டி ஸ்கேன் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல்வேறு திசுக்கள் மற்றும் உள் உறுப்புகளை பரிசோதிப்பது இந்த புதிய வசதியில் இடம்பெற்றுள்ளது. உடல் சி.டி ஸ்கேன் இயந்திரத்தில் வைக்கப்படும். அந்த இயந்திரம் உடலின் சுமாா் 25,000 படங்களை நொடிகளில் உருவாக்கும். அதன் பின்னா் அவற்றை நிபுணா்கள் ஆராய்வா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments