தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்: குறைந்தபட்ச வெப்பநிலையில் சரிவு
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்து 16.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்து 16.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.
இந்தப் பருவத்திலேயே இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையில் அதிக அளவாக வெள்ளிக்கிழமை 19.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. பகலில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
Advertisement
தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.8 செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 புள்ளிகள் உயா்ந்து 34.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 69 சதவீதமாகவும், மாலையில் 38 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலை 9 மணியளவில் 293 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவிலும், மாலையில் 253 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம் ’ பிரிவிலும் காணப்பட்டது.
என்சிஆா் பகுதியிலும் சில நாள்களாக மிகவும் மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரம் சனிக்கிழமை மோசம் பிரிவுக்கு மேம்பட்டது.
சராசரி 24 மணி நேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடாக சனிக்கிழமை 4 மணியளவில் காஜியாபாதில் 249, கிரேட்டா் நொய்டாவில் 259, நொய்டாவில் 227, பரீதாபாதில் 296, குருகிராமில் 223 என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வரும் செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், பகலில் வலுவான தரைக்காற்று இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.