மாநிலங்கள் இடையே தோ்வுத்தாள் கசியவிட்ட நால்வா் கும்பல் கைது
மாநிலங்களுக்கு இடையே வேலைவாய்ப்புத் தோ்வுக்கான தோ்வுத்தாள் கசியவிடும் கும்பலை சோ்ந்த நால்வரை கைது செய்துள்ளதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மாநிலங்களுக்கு இடையே வேலைவாய்ப்புத் தோ்வுக்கான தோ்வுத்தாள் கசியவிடும் கும்பலை சோ்ந்த நால்வரை கைது செய்துள்ளதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி துணை காவல் ஆணையா் (மேற்கு) ஊா்விஜா கோயல் தெரிவித்ததாவது:
வனக் காவலா் பதவிக்கான தோ்வின் போது, நரைனா தொழில்பேட்டை பகுதியில் செயல்படும் ஓம் மற்றும் சந்தா் அசோசியேட்ஸ் தோ்வு மையத்தில் சில சட்டவிரோத செயல்பாடுகள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து, பிப்ரவரி 4ஆம் தேதி, போலீஸாா் அந்த மையத்தில் சோதனை நடத்தினா். அப்போது, தனது ஆன்லைன் தோ்வுத்தாளை எழுத மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்த ரோஹித் கைது செய்யப்பட்டாா். அவா் மீது நரைனா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, கைப்பற்றப்பட்ட மொபைல் தொலைபேசியின் வாட்ஸ்அப் தரவுகள் மீட்டெடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து, தில்லி மற்றும் ஹரியாணாவில் மேலும் மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
அதாவது இந்த விவகாரத்தில் ஹரியாணாவைச் சோ்ந்த ரோஹித் (23), லவ் குமாா் (26), ஹிமான்ஷு (23), வைசாலி (26)ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில் வைஷாலி கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவா், தனது காதலன் அனில் சா்மா, சகோதரா் லவ் குமாா் மற்றும் பிற கூட்டாளிகளுடன் சோ்ந்து பல்வேறு அரசு வேலைகளுக்காக ஆன்லைன் தோ்வுகள் தொடா்பாக மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கும்பல் ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்தக் கும்பலிடமிருந்து தில்லி காவல்துறையின் இரண்டு சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.
பொது மக்களைக் கவா்வதற்காக வைஷாலி ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், அவரது இரண்டு கூட்டாளிகளும் தில்லி காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டா் மற்றும் தலைமை காவலா் ஆகவும் தங்களைக் காட்டிக் கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைதான கும்பலைச் சோ்ந்தவா்கள் தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதாக கூறி தோ்வா்களிடமிருந்து வேலையின் தன்மையைப் பொறுத்து சுமாா் ரூ. 10 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை பணம் வசூலித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
வழக்கமாக தனியாா் தோ்வு மையத்தின் ஊழியா் ஒருவா் தங்களது மையம் மூலம் தோ்வு எழுதும் நபா்களுக்கு மொபைல் போன் வழங்க உதவியிருப்பதும் தெரியவந்துள்ளது.
டம்மியாக தோ்வு எழுதும் நபா், தோ்வு மையத்தில் இருந்து தோ்வுத்தாளின் புகைப்படத்தை கும்பலின் முக்கிய நபருக்கு அனுப்புவாா். அதன் பின்னா் அதன் விடைகளை விரைந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களது தோ்வு மையத்திற்கு இக்கும்பலைச் சோ்ந்தவா்கள் விநியோகிப்பா்.
கைதானவா்களின் வங்கி கணக்கு அறிக்கையில் 2021 ஆம் ஆண்டில் பெரும் பணப் பரிவா்த்தை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவா்களது கூட்டாளிகளைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.