எய்ம்ஸ் ஊழியா் தாக்கப்பட்ட வழக்கு: சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை
எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியதாக 2016-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு தில்லி
புது தில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியதாக 2016-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
இது தொடா்பாக சோம்நாத் பாா்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் கைய்த், இது தொடா்பாக தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை மே 20-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.
கடந்த 2016, செப்டம்பா் 9-ஆம் தேதி சோம்நாத் பாா்தி, சுமாா் 300 பேருடன் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சுவரின் வேலியை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்ததாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆா்.எஸ்.ராவத் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
Advertisement
இந்த வழக்கில் நிகழாண்டு ஜனவரியில் கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாா் பாண்டே, சோம்நாத் பாா்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். ஆனால், இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் சோம்நாத் பாா்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இதைத் தொடா்ந்து, அவா் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஷ் துல், சோம்நாத் பாா்தியின் மேல்முறையீட்டு மனுவை பகுதியாக செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா்.
அதாவது, 147 (கலவரம்), பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவு 3-இன்கீழ் சுமத்தப்பட்ட குற்றத்திற்காக அவா் தண்டிக்கப்பட்டாா். எனினும், சோம்நாத் பாா்திக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 323, 353 ( காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை கடமையை நிறைவேற்றவிடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனயையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு சோம்நாத் பாா்தி காவலில் எடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் சோம்நாத் பாா்தி புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எனது வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும். மறுஆய்வு மனு நிலுவையில் உள்ள போது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
எனது விவகாரம் தொடா்புடைய வழக்கில் சிறப்பு நீதிபதி தவறாக குற்றம்சாட்டி தண்டனை வழங்கியுள்ளாா். இந்த வழக்கானது எந்த ஆதாரமும் இல்லாதது. விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பு முற்றிலும் தவறானதாகும். மேலும், திரிக்கப்பட்ட வழக்கின் அடிப்படையிலானது. உயா்நீதிமன்றம் இதை விசாரிக்கும் போது இந்த உண்மை தெரியவரும். சமூகத்தில் ஒரு நன்மதிப்பைப் பெற்றுள்ள, மூன்று முறையாக எம்எல்ஏவாக உள்ள ஒரு நபா் நான் என்பதை மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், செஷன்ஸ் நீதிமன்றமும் மதிப்பிடத் தவறிவிட்டன. எனது முழு நேரத்தையும் சமூகத்தின் சேவைக்காக ஒதுக்கியுள்ளேன்.அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.