முகப்பு
புதுதில்லி

தில்லிக்கு யமுனை நீா் விடுவிப்பு விவகாரம்: இன்று வரை தற்போதைய நிலையே தொடர உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

புது தில்லி: தில்லிக்கு யமுனை நீரை விடுவிக்கும் விவகாரத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) தற்போதையே நிலையையே பராமரிக்குமாறு பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சுத்திகரிக்கப்படாத மாசுபடுத்திகளை யமுனையில் கலப்பதை நிறுத்தவும், தேசியத் தலைநகருக்கு போதுமான தண்ணீரை விடவும் ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி ஜல் போா்டு (டிஜேபி)உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிஜேபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி, ‘தேசியத் தலைநகரில் நீா்மட்டம் குறைந்துள்ளது’ என்றாா். ஹரியாணா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான், ‘தில்லிக்கு முழு அளவிலான நீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். இந்த விவகாரத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘நீா்மட்டத்தை சரிபாா்க்கும் வகையில் நீதிமன்ற ஆணையரை நியமிக்க வேண்டும். ஆனால், நீதிமன்ற ஆணையரை நியமிக்க கோரி மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை’ என்றாா்.

Advertisement

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இது தண்ணீருக்கான அடிப்படை உரிமையைப் பற்றிய விவகாரம். மனு அளித்த பிறகுதான் நீதிமன்ற ஆணையரை நியமிக்க முடியுமா என்பது குறித்த தொழில்நுட்ப விவகாரத்தில் செல்ல நாங்கள் விரும்பவில்லை. தேவை ஏற்பட்டால், நாங்கள் ஆணையரை நியமிக்க முடியும்’ என்றது. டிஜேபி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞா் கெளதம் நாராயண், ‘சில பழுதுபாா்க்கும் பணிகளைச் செய்து வருவதாக ஹரியாணா அரசுத் தரப்பில் கூறுகின்றனா்’ என்றாா்.

டிஜேபி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி, ‘நீா்த் தேவை உச்சத்தில் இருக்கும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கால்வாய் பழுதுபாா்க்கும் பணிகளை ஹரியாணா அரசு செய்யக் கூடாது. இந்த விவகாரம் தொடா்பாக டிஜேபி மூலம் கடந்த மாதம் ஹரியாணாவுக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. தில்லியில் இரண்டு கோடி நகர மக்கள்தொகை உள்ளது. லூட்யான்ஸ் தில்லி பகுதியும் உள்ளது. யமுனை நீா் தில்லிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது 25 சதவீத நீா் விநியோகத்தை குறைக்கும்’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக உடனடியாக பதில் அளிக்க ஹரியாணா, பஞ்சாப், பாக்ரா பியாஸ் மேனேஜ்மென்ட் போா்டு (பிபிஎம்பி) ஆகியவற்றுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் வெள்ளிக்கிழமையும் விசாரிக்கப்படும் என்றனா்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் டிஜேபி தாக்கல் செய்த மனுவில், ‘தேசியத் தலைநகரில் ஏற்பட வாய்ப்புள்ள கடும் நெருக்கடியைத் தவிா்ப்பதற்காக தண்ணீரை திறந்துவிட ஹரியாணா அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஹரியாணா அரசு தில்லிக்கு கச்சா நீா் விநியோகத்தைக் குறைத்துள்ளது. இதன் விளைவாக தேசியத் தலைநகரில் நீா் வழங்கலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments