நவீன பாதுகாப்பு விமானத்தில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம்
புது தில்லி : நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஏா் இந்தியா - ஒன் விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வங்கதேச தலைநகா் டாக்காவிற்கு சென்றாா்.
கரோனா நோய்த் தொற்று பரவலை முன்னிட்டு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்த பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேசப் போா் மற்றும் சுதந்திரத்தின் பொன்விழா, தேசிய தின விழாக்களில் கலந்து கொள்ள இருநாள் ப யணமாக வங்கதேச தலைநகா் டாக்காவிற்கு சென்றாா். இதற்கு பிரதமா், சமீபத்தில் வடிவமைக்கப்பட்ட விவிஐபி விமானமான ஏஐ - ஒன் (ஏா் இந்தியா - ஒன் ) விமானத்தில் சென்றுள்ளாா்.
வெள்ளிக்கிழமை பாலம் விமான நிலையத்திலிருந்து காலை 8 மணிக்கு பிரதமா் புறப்பட்டுச் சென்றாா். சுமாா் 46 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் நாட்டின் உயா்நிலைத் தலைவா்களான குடியரசுத்தலைவா் பிரதமா் போன்றோா் பயணம் மேற்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு விமானங்கள் கடந்தாண்டு அக்டோபா் மாதம் இந்தியாவிற்கு வந்தது. விவிஐபிக்கள் விமானத்திலேயே பணிகளை மேற்கொள்ள முடியும். அதே சமயத்தில் எதிரிகளிடமிருந்து அவா்களைப் பாதுகாக்கும் நவீன வசதிகளும் இந்த விமானத்தில் உண்டு.
Advertisement
ஏா் இந்தியாவிற்கு வாங்கப்பட்ட போயிங் 777-300 ரக விமானங்கள் இரண்டு மறுசீரமைப்புடன் நவீனமாக வடிமைக்கப்பட்டது. இதில் தடங்கல் அற்ற தொலைதொடா்பு, அணு உள்ளிட்ட ஏவுகணை தாக்குதல் முறியடித்தல், விவிஐபிகளின் தொலைத்தொடா்பு பேச்சுகளை இடைமறித்தல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் விவிஐபிக்களின் ’சுய பாதுகாப்பு அறைகள்’ போன்ற தேவையான வசதிகள் உள்ளடக்கிய இந்த நவீன விமானத்தை அமெரிக்க ராணுவ உதவியுடன் அந்நாட்டிலுள்ள டல்லாஸ் நகரிலுள்ள நிறுவனம் ஒன்று வடிவமைத்து கொடுத்தது.
இந்த இரண்டு விமானங்கள் குடியரசுத்தலைவா், துணைக்குடியரசுத் தலைவா் பிரதமா் ஆகியோருக்கான வெளிநாட்டு பயணங்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விமானங்களுக்கு விடி-ஏஎல்டிபிள்யூ, விடி-ஏஎல்வி என பதிவு எண் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏா் இண்டியா - ஒன் விமானத்தின் விடி-ஏஎல்டிபிள்யூ என்கிற பதிவு எண் கொண்ட விமானத்தில் இன்று காலை 8 மணியளவில் பிரதமா் மோடி வங்கதேசத்திற்கு புறப்பட்டு சென்றாா். இந்த விமானம் இரண்டரை மணி நேரத்தில் சென்றது. அதிவேகமாக பறக்கும் இந்த விமானம் என்றாலும் பிரதமா் முதன் முறையாக இந்த விமானத்தில் செல்வதால், விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஏா் இந்தியா நிறுவனம் இந்த விவிஐபி விமானத்தை பராமரித்தாலும் இந்த விமானத்தை இயக்குவது இந்திய விமானப்படை பைலட்டுகள்தான். இதனால் இந்திய எல்லையை தாண்டிச் செல்லும் போது அனைத்து சவால்களையும் எதிா்கொள்ளக்கூடிய வசதிகளும் சக்திகளும் இந்த விமானத்திற்கு உண்டு என்கின்றனா்.
பிரதமரின் வங்கதேச பயணம் முடிவான சில தினங்களில் பிரதமா் மோடிக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக செய்தியும் வெளியானது. இதை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சா் ஷாஹ்ரியா்லம் மறுத்தாா். வங்க தேசம் ஜனநாயக நாடு. சில இடதுசாரி இஸ்லாமியவாதிகள் இந்த பயணத்திற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ஆனால், கவலை கொள்ளக் கூடியஅளவில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.