தெளிவான வானிலையால் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு
புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை நிலவிய தெளிவான வானிலையால் அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்பட்டது. வியாழக்கிழமை 29.6 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்த வெப்பநிலை, வெள்ளிக்கிழமை 32 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் மிதமாக இருந்தது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 16டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 32 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 66 சதவீதமாகவும், மாலையில் 39 சதவீதமாகவும் இருந்தது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 32.5 டிகிரி செல்சியஸ், தில்லி பல்கலை.பகுதியில் 31.8 , லோதி ரோடில் 32.3, நரேலாவில் 32.8, பாலத்தில் 32, ரிட்ஜில் 32.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலை 7 மணியளவில் 137 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
Advertisement
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (மாா்ச் 27) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வாகனம் தெளிவாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் திங்கள்கிழமைக்குள் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினா் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.